2015-05-05 15:57:00

அனைத்துலக காரித்தாஸ் நிறுவனத்தின் 20வது மாநாடு


மே,05,2015. “ஒரே மனிதக் குடும்பம், இயற்கையைப் பாதுகாத்தல்” என்ற தலைப்பில் அனைத்துலக காரித்தாஸ் நிறுவனத்தின் 20வது மாநாடு இம்மாதம் 12ம் தேதி தொடங்கவுள்ளது.

12ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இம்மாநாட்டின் உறுப்பினர்களுக்குத் திருப்பலி நிறைவேற்றி இதனைத் தொடங்கி வைப்பார்.

இம்மாதம் 12 முதல் 17 வரை நடைபெறும் இம்மாநாடு குறித்து வத்திக்கான் வானொலி பணியாளர்களிடம் இத்திங்களன்று விளக்கிய, அனைத்துலக காரித்தாஸ் நிறுவனத்தின் Michelle Hough அவர்கள், இம்மாநாடு அடுத்த நான்கு ஆண்டுத் திட்டத்தை வகுக்கும் எனக் கூறினார்.

ஏறக்குறைய 160 நாடுகளில் பணியாற்றும் தல காரித்தாஸ் மையங்களின் இயக்குனர்கள், பல்வேறு பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்வார்கள்.

மிலான் எக்ஸ்போவில் இம்மாதம் 19ம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் காரித்தாஸ் தினத்திலும், இம்மாநாடு முடிந்தவுடன், இதன் உறுப்பினர்கள் அனைவரும், பங்கெடுப்பார்கள். இது, “2025ம் ஆண்டுக்குள் உலகில் பசியை அகற்றுதல்” என்ற அனைத்துலக காரித்தாஸ் நிறுவனத்தின் இலக்கின் ஒரு நிகழ்வாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.