2015-05-04 16:36:00

நேபாள துயர் துடைப்புப் பணியில் ஒன்றிணைந்து உழைக்க அழைப்பு


மே,04,2015. நேபாளத் தலத்திருஅவையின் அழைப்பை ஏற்று அந்நாட்டின் அனைத்து மத உதவி அமைப்புகளும் ஒரே குடையின் கீழ் பணியாற்ற முன்வந்துள்ளன.

இணைந்து பணியாற்றும்போது மேலும் பலத்துடனும் சீரிய முறையிலும், நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவையாற்ற முடியும் என நேபாள கத்தோலிக்க திரு அவை விடுத்த அழைப்பைத் தொடர்ந்து, பிரிந்த கிறிஸ்தவ சபை, இஸ்லாம், புத்தம் மற்றும் இந்து மத பிறரன்பு அமைப்புகள், கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்புடன் இணந்து பணியாற்ற முன்வந்துள்ளன.

இந்திய காரித்தாஸ் மற்றும் ஆஸ்திரேலிய காரித்தாஸ் அமைப்புகளுடன் இணைந்து நேபாள காரித்தாஸ் அமைப்பு ஆற்றிவரும் இடர்துடைப்புப் பணிகளில் கைகோர்க்க மத வித்தியாசமின்றி அனைவரும் முன்வந்துள்ளனர்.

நம் செபங்களோடு இணைந்து நம் பணிகளும் செல்ல வேண்டும் என்பதை நினைவில் கொண்டு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக இடர்துடைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள மத அமைப்புகள் அறிவித்தன.

நேபாள நில அதிர்ச்சிக்குப் பின்னர் உடனடியாக அப்பகுதிகளில் துயர்துடைப்புப் பணிகளை மேற்கொண்டவர்கள் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பினராகும். 

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.