2015-05-04 16:29:00

உங்கள் செயல்களால் நீங்கள் கிறிஸ்தவர்கள் என அறியப்படவேண்டும்


மே,04,2015. திராட்சைக் கொடியின் கிளைகள்போல் அனைத்துக் கிறிஸ்தவர்களும் உயிர்த்த கிறிஸ்துவில் ஒன்றித்திருக்க அழைக்கப்பட்டுள்ளார்கள், அவ்வாறு ஒன்றித்திருக்கும் கிளைகளே மிகுந்த கனிதர முடியும் என இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையின்போது எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.

தான் இறப்பதற்கு முன்னர், இயேசு, தன் சீடர்களுடன் மேற்கொண்ட இறுதி இரவு உணவு குறித்த இஞ்ஞாயிறு திருப்பலி வாசகம் குறித்து தன் அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் எடுத்தியம்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'கொடி திராட்சைச் செடியோடு இணைந்து இருந்தாலன்றி தானாக கனி தர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றி கனி தர இயலாது' என்ற இயேசுவின் வார்த்தைகளை மையமாக வைத்து தன் கருத்துக்களை அளித்தார்.  கிளைகள் முற்றிலுமாக திராட்சைச் செடியையே சார்ந்து இருக்கவேண்டும், ஏனெனில் அவைகள் கொடியின்றி தன்னிலையிலேயே நிறைவு பெற்றவைகள் அல்ல என்பதால், கிறிஸ்தவர்களும் இயேசுவோடு ஒன்றாக இணைந்திருப்பதன் வழியாகவே கனிகளைத் தரமுடியும் என்றார் திருத்தந்தை.

நாம் பெற்ற திருமுழுக்கிற்கு விசுவாசமாக இருக்கும் அதேவேளை, செபத்தின் வழியாகவும், அருளடையாளங்கள், குறிப்பாக நற்கருணை மற்றும் ஒப்புரவு அருளடையாளங்கள் மூலமாக இயேசுவுடன் நெருக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என விண்ணப்பித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவுடனான நெருங்கிய இணைப்பின் மூலமாக  நாம் தூய ஆவியின் கனிகளாகிய, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பவைகளைப் பெற்று ருசிக்க முடியும் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் அயலார்களுக்கு ஆற்றவேண்டிய நன்மைத்தனங்களையும் எடுத்தியம்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகைய செயல்கள் மூலமே உலகம் நம்மைக் கிறிஸ்தவர்கள் என அடையாளம் கண்டுகொள்ளும், ஏனெனில் கனியைக் கொண்டே மரம் அறியப்படும் எனவும் கூறினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.