2015-05-02 15:26:00

பங்குத்தளங்கள் நற்செய்தி அறிவிப்புக்குச் சிறந்த இடங்கள்


மே,02,2015. நாடுகள், நகரங்கள், வேலைசெய்யும் இடங்கள், பள்ளிகள், வீடுகள் என எல்லா இடங்களிலும் ஒருமைப்பாட்டுணர்வுக்குச் சாட்சியாக வாழுங்கள் என்று இத்தாலிய கத்தோலிக்கரிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தென் இத்தாலியின் Isernia - Venafro மறைமாவட்டத்தின் ஏறக்குறைய ஏழாயிரம் திருப்பயணிகளை இச்சனிக்கிழமையன்று திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றிய  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி இம்மறைமாவட்டத்துக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டபோது கூறிய அறிவுரைகளை மீண்டும் நினைவுபடுத்தினார்.

இம்மறைமாவட்ட மக்கள், குறிப்பாக இளையோர் எதிர்நோக்கும் வேலைவாய்ப்பின்மை, வேறு நாடுகளுக்கு அவர்கள் செல்வதற்குக் காரணமாக உள்ளது என்றும், ஒருமைப்பாட்டுணர்வால் பிரச்சனைகளை மேற்கொள்ள இயலும் என்றும் கூறினார் திருத்தந்தை.

நல்லதோர் எதிர்காலம் பற்றிய கூறுகளை துன்பங்கள் சிதறடிக்கும்போதும், வாழ்வில் தோல்வியையும் வெறுமையையும் எதிர்கொள்ளும்போதும் உயிர்த்த கிறிஸ்துவின்மீது ஊன்றப்பட்ட நம்பிக்கை ஆறுதலளிக்கின்றது என்றும், தேவையில் இருப்போருக்கு உதவி செய்யத் தூண்டுகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

இரக்கத்தின் சிறப்பு ஜூபிலி ஆண்டுக்கு இம்மறைமாவட்டத்தினர் தயாரித்து வருவதைப் பாராட்டிய அதேவேளை, செலஸ்தீன் ஜூபிலி ஆண்டைச் சிறப்பித்துவரும் இம்மக்கள் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பரப்புவதில் ஆர்வத்துடன் செயல்படுமாறு ஊக்கப்படுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.