2015-05-02 15:32:00

உரோம் வட அமெரிக்கக் கல்லூரி Junipero விழாவில் திருத்தந்தை


மே,02,2015. உரோம் நகரிலுள்ள வட அமெரிக்கக் கல்லூரியில் இச்சனிக்கிழமையன்று நடைபெற்ற அருளாளர் Junipero Serra அவர்கள் குறித்த திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமெரிக்கக் கண்டம் தான் பெற்றுள்ள நற்செய்தியில், மேலும் ஆழமாக ஊன்றப்பட வேண்டுமென்ற             ஆவலை வெளியிட்டார்.

அருளாளர் Junipero Serra அவர்கள் வாழ்வில் விளங்கிய மறைப்பணி ஆர்வம், அன்னைமரியா பக்தி, தூய வாழ்வுக்குச் சான்று ஆகிய மூன்று பண்புகளை விளக்கிய திருத்தந்தை, இத்தூயவர் இறைவனின் அழைப்புக்குக் காட்டிய தாராளம் மற்றும் துணிச்சல், இக்காலத்தில் வாழும் நம்மிடம் காணப்படுகின்றதா என்ற கேள்வியை எழுப்பினார்.

இஸ்பெயினிலிருந்து அமெரிக்கா வந்து மெக்சிகோவிலும், பின்னர், ஃப்ளாரிடாவிலிருந்து  கலிஃபோர்னியா வரை நற்செய்தி அறிவித்த பிரான்சிஸ்கன் அருள்பணியாளர் Junipero அவர்கள், கலிஃபோர்னியாவை விட்டுச் செல்வதற்கு முன்னர் குவாதலூப்பே அன்னைமரியாவிடம் அனைவரையும் அர்ப்பணிக்க விரும்பினார் என்றும் கூறினார் திருத்தந்தை.

அமெரிக்கர்கள் வாழ்வில் கிறிஸ்துவின் ஒளி பிரசன்னமாக இருந்து, இவ்வொளி, வாழ்வுக் கலாச்சாரம், ஒருமைப்பாட்டுணர்வு, அமைதி, நீதி, உடன்பிறப்பு உணர்வு ஆகியவற்றில் வெளிப்படுத்தப்படட்டும் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.   

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வருகிற செப்டம்பரில் அமெரிக்க ஐக்கிய நாட்டுக்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொள்ளும்போது அருளாளர் Junipero Serra அவர்களை, புனிதராக அறிவிப்பார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.