2015-05-01 16:03:00

வத்திக்கான் இசை நிகழ்ச்சியில் ஏழைகளுக்கு முதலிடம்


மே,01,2015. இம்மாதத்தில் நடைபெறவிருக்கும் வத்திக்கான் பிறரன்பு இசை நிகழ்ச்சியில் குடியேற்றதாரர், ஏழைகள், வயதானவர்கள் மற்றும் ஒதுக்கப்பட்டோர் முதல் வரிசை இருக்கைகளில் அமர்த்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 14ம் தேதி வத்திக்கான் அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில் நடைபெறவிருக்கும் இசை நிகழ்ச்சியில், நன்கொடையாளர்களுக்கு பின்வரிசைகளில் இருக்கைகள் ஒதுக்கப்படும் என்று, திருத்தந்தையின் தர்மப் பணி அலுவலகத் தலைவர் பேரருள்திரு Diego Giovanni Ravelli அறிவித்தார்.

வீடற்றோர், புகலிடம் தேடுவோர், குடியேற்றதாரர், இன்னல்களை எதிர்நோக்கும் குடும்பங்கள், இளையோர் போன்ற மக்களுள் இரண்டாயிரம் பேரை உள்ளூர் பிறரன்பு நிறுவனங்களும், பங்குத்தளங்களும் அழைத்து வருவார்கள் என்றும் செய்தியாளர் கூட்டத்தில் இவ்வியாழனன்று அறிவித்தார் பேரருள்திரு Ravelli.

திருத்தந்தையின் பிறரன்புச் செயல்களுக்காக, திருத்தந்தையின் தர்மப் பணி அலுவலகம் இந்த இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த ஆண்டில் எட்டாயிரத்துக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் உதவி கேட்டு வந்தன என்றும், 15 இலட்சத்துக்கும் மேற்பட்ட யூரோக்களை இந்த அலுவலகம் உதவியாக வழங்கியுள்ளது என்றும் கூறினார் பேரருள்திரு Ravelli.   

திருத்தந்தையின் தர்மப் பணி அலுவலகம் 1409ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

இவ்வாண்டில், இத்தாலிய மத்திய கால கவிஞர் Dante Alighieri அவர்கள் பிறந்ததன் 750ம் ஆண்டு சிறப்பிக்கப்படுவதால், இந்த இசை நிகழ்ச்சி அவரின் "The Divine Comedy" காவியத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்றும் அறிவித்தார் பேரருள்திரு Ravelli.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.