2015-05-01 15:50:00

மிலான் எக்ஸ்போ 2015 தொடக்க விழாவில் திருத்தந்தை உரை


மே,01,2015. மிலான் அனைத்துலக கண்காட்சி, உலகளாவிய தோழமையுணர்வைக் காட்டுவதற்குச் சிறந்த தருணம், இந்த வாய்ப்பை வீணாக்காமல் எவ்வளவுக்கு அதிகமாக இதனைப் பயனடையச் செய்ய இயலுமோ அவ்வளவுக்கு முயற்சிக்குமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே,01, இவ்வெள்ளியன்று, வட இத்தாலியின் மிலானில் துவங்கிய எக்ஸ்போ 2015 தொடக்க நிகழ்வில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வத்திக்கானிலிருந்து நேரடி ஒளிபரப்பின் மூலமாக உரையாற்றியபோது இவ்வாறு கேட்டுக்கொண்டார்.

கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவர் அல்லாதவர்கள் என எல்லாச் சகோதர சகோதரிகளும் இறைவனின் குழந்தைகள், இறைவன் அனைவரையும் அன்பு கூர்ந்து அனைவருக்காவும் தம் வாழ்வைக் கையளித்தார் என்பதால், அனைவர் பெயரால் இவ்விண்ணப்பத்தை முன்வைப்பதாகத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

எங்கள் அன்றாட உணவை எங்களுக்குத் தந்தருளும் என்று வானகத் தந்தையை நோக்கி, இறைமகன் இயேசு கேட்கச் சொன்னதை இன்று அனைத்து மக்கள் பெயராலும் கேட்கிறேன் என்றும் கூறினார் திருத்தந்தை.

இத்தாலிய ராய் தொலைக்காட்சி நிறுவனம், வத்திக்கான் தொலைக்காட்சி நிறுவனம் ஆகிய இரண்டும் இணைந்து திருத்தந்தையின் இந்த நேரடி ஒளிபரப்பை நடத்தின.  

“இப்புவிக்கு உணவளித்தல் : வாழ்வுக்குச் சக்தி” என்ற தலைப்பில் மிலானில் தொடங்கப்பட்ட அனைத்துலக எக்ஸ்போ 2015 என்ற நிகழ்வு, வருகிற அக்டோபர் 31ம் தேதி வரை நடைபெறும். இந்த ஆறுமாத நிகழ்வில் 140க்கும் மேற்பட்ட நாடுகள், தங்களின் சிறந்த தொழில்நுட்பங்களையும் அவற்றின் பயன்களையும் வெளிப்படுத்தும். 11 இலட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் நடைபெறும் இந்தக் கண்காட்சியை 2 கோடிக்கு மேற்பட்ட மக்கள் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல பன்னாட்டு நிறுவனங்களும் பங்கேற்கும் இந்நிகழ்வில் உலகின் மிக சுவையான, சிறந்த உணவு வகைகள், சிறந்த வேளாண் முறைகள் போன்றவையும் இடம்பெறும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.