2015-05-01 16:14:00

மத்திய கிழக்கின் துன்ப நிகழ்வுகள் புறக்கணிக்கப்படுன்றன


மே,01,2015. மத்திய கிழக்கில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் யூதர்கள் மத்தியில் நூற்றாண்டுகளாக நிலவிய நல்லிணக்கம் உண்மையாகவே சிதைந்து வருவதாக, திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.

இத்தாலியின் பாரி நகரில், “மத்திய கிழக்கில் கிறிஸ்தவர்கள் : அவர்களின் எதிர்காலம் என்ன?” என்ற தலைப்பில், சான் எஜிதியோ கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு நடத்திவரும் கருத்தரங்கில் உரையாற்றிய கீழை வழிபாட்டுமுறை பேராயத் தலைவர் கர்தினால் லெயோனார்தோ சாந்திரி அவர்கள், மத்திய கிழக்குக் கிறிஸ்தவர்களுக்கு நம் ஒருமைப்பாட்டுணர்வு தேவை என்று கூறினார்.

சிரியாவும், ஈராக்கும் பல ஆண்டுகளாக அனுபவித்துவரும் துன்ப நிகழ்வுகளை அனைத்துலக சமுதாயம் புறக்கணிக்கின்றது மற்றும் அத்துன்பங்களை அகற்றுவதற்கு திறனற்றும் உள்ளது என்றும் குறை கூறினார் கர்தினால் சாந்திரி.

மத்திய கிழக்கின் நிலையான தன்மை குறித்து நடைபெறும் விவாதங்களில் இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரம் இடம்பெற வேண்டும், அனைத்து நாடுகளும் அச்சுறுத்தலின்கீழ் வாழாமல், பாதுகாப்புடன் வாழ்வதற்கு உரிமையைக் கொண்டுள்ளன என்றும் பாரி கூட்டத்தில் உரையாற்றினார் கர்தினால் சாந்திரி. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.