2015-04-30 16:17:00

தூய ஆவியார் ஒன்றிப்பை நோக்கி நம்மை வழிநடத்துகிறார்


ஏப்.30,2015. முழுமையான ஒன்றிப்பை நாம் அடையவில்லையெனினும், புதிய தடைகளையும், சவால்களையும் நாம் சந்தித்துவரினும், தூய ஆவியார் ஒன்றிப்பை நோக்கி நம்மை வழிநடத்துகிறார் என்று கிறிஸ்தவ ஒன்றிப்பை வளர்க்கும் ஒரு கழகத்தின் உறுப்பினர்களிடம் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.

கிறிஸ்தவ ஒன்றிப்பு என்ற முயற்சியை வளர்க்க, வத்திக்கானில் கூடிவந்துள்ள ஆங்கிலிக்கன் சபை மற்றும் கத்தோலிக்கத் திருஅவை உறுப்பினர்கள் அடங்கிய அகில உலக கழகத்தின் பொறுப்பாளர்களை இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, இக்கழகத்தின் பணிகளைப் பாராட்டிப் பேசினார்.

திருத்தந்தை முத்திப்பேறு பெற்ற ஆறாம் பவுல் அவர்களும், அப்போதைய காண்டர்பரி பேராயர் முனைவர் மைக்கிள் ராம்சி (Ramsey) அவர்களும் 1966ம் ஆண்டு மேற்கொண்ட வரலாற்று சிறப்பு மிக்கச் சந்திப்பின் தொடர்ச்சியாக, நமது சந்திப்புக்கள் கடந்த 50 ஆண்டுகளாக பலனளித்து வந்துள்ளன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.

இக்கழகம் மேற்கொண்ட பல விவாதங்களின் முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளன என்பதைக் குறிப்பிட்டத் திருத்தந்தை, தூய ஆவியாரின் துணையோடு, இந்த ஒன்றிப்பு முயற்சி இன்னும் அதிகமாக நம்மை இணைக்கும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.

மதத்தின் அடிப்படையில் வன்முறைகளைச் சந்திக்கும் மக்களுக்கு, நாம் அளிக்கக்கூடிய ஒரு பெரும் சாட்சியம், நமது ஒன்றிப்பு முயற்சி என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்கழகத்தின் உறுப்பினர்களிடம் வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.