2015-04-30 16:42:00

இயேசுவைப்போல் நேபாள கிறிஸ்தவர்கள் செயலாற்ற வேண்டும்


ஏப்.30,2015. மனுக்குலத்திற்கும், இவ்வுலகிற்கும் தன்னையே தியாகம் செய்த கிறிஸ்துவைப் பின்பற்றி, நேபாளத்தில் வாழும் கிறிஸ்தவர்கள், பொறுப்புள்ள குடிமக்களாக மற்றவர் துயர் துடைக்க முன்வரவேண்டும் என்று நேபாள அப்போஸ்தலிக்க நிர்வாகியான ஆயர் பால் சிமிக் (Paul Simick) அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.

அச்சத்திலும், விரக்தியிலும் ஆழ்ந்திருக்கும் நேபாளத்தில், மதம் என்ற எல்லையைத் தாண்டி, மனிதாபிமான உணர்வுடன் கிறிஸ்தவர்கள் முழு வீச்சில் செயலாற்ற வேண்டும் என்று ஆயர் சிமிக் அவர்கள் கூறியுள்ளார்.

கடந்த சனிக்கிழமையன்று நேபாளத்தில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தில், இதுவரை, 5500க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் என்றும், 12,000த்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்றும் ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

இடிந்து விழுந்துள்ள வீடுகளில் நுழைவதற்கு மக்கள் தயங்கிவரும் வேளையில், இவ்வீடுகளில் உள்ள விலைமதிப்புள்ள பொருள்களைத் திருடுவதில் கும்பல்கள் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

சனிக்கிழமை ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அடுத்த 72 மணி நேரங்களில் 1,043 நில அதிர்வுகள் ஏற்பட்டன என்று, நேபாள காவல்துறை அதிகாரி, ஹேமந்த கார்கி அவர்கள் தெரிவித்தார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.