2015-04-29 15:14:00

மனித வர்த்தகத்தை வேரறுப்பது திருஅவை கடமை - கர்தினால் வேலியோ


ஏப்.29,2015. மனித வர்த்தகம் என்ற அநீதியை உலகின் கவனத்திற்குக் கொணர்வதும், இந்த அநீதியை முற்றிலும் களைவதும் கத்தோலிக்கத் திருஅவையின் தலையாயக் கடமைகளில் ஒன்று என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

குடிபெயர்ந்தோர் மற்றும் பயணிகள் நலனுக்கெனப் பணியாற்றும் திருப்பீட அவையும், அகில உலகக் காரித்தாஸ் அமைப்பும் இணைந்து, மனித வர்த்தகத்திற்கு எதிராக உருவாக்கியுள்ள ஓர் அறிக்கையை, இப்புதனன்று வெளியிட்ட நிகழ்வில் பேசிய இத்திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் அந்தோனியோ மரிய வேலியோ அவர்கள் இவ்வாறு கூறினார்.

இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள், உலகெங்கிலும் பணியாற்றும் அனைத்து மறைமாவட்டங்கள், பங்குத்தளங்கள், இருபால் துறவியர் பணி நிலையங்கள், மற்றும் ஏனைய கிறிஸ்தவ இயக்கங்கள் அனைத்தின் வழியாகவும், மக்களைச் சென்றடையும் என்று கர்தினால் வேலியோ அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்.

மனித வர்த்தகம் என்ற அநீதியைக் களைவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளும் உலக அமைப்புக்கள் அனைத்திற்கும், கத்தோலிக்கத் திருஅவையின் முழு ஆதரவும், ஒத்துழைப்பும் உண்டு என்று கர்தினால் வேலியோ அவர்கள் உறுதியளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.