2015-04-29 15:24:00

மனித வர்த்தகத்திற்கு எதிராக திருப்பீடத்தின் அறிக்கை


ஏப்.29,2015. அடிமைத்தனத்தின் இன்றைய வெளிப்பாடாக, கட்டாயத் தொழில், பாலியல் தொழில், பிச்சையெடுத்தல் ஆகிய கொடுமைகளுக்கு மனிதர்கள் உள்ளாக்கப்படுகின்றனர் என்று திருப்பீடத்தின் அறிக்கையொன்று கூறுகிறது.

வத்திக்கானில், இப்புதனன்று, குடிபெயர்ந்தோர் மற்றும் பயணிகள் நலனுக்கென பணியாற்றும் திருப்பீட அவையும், அகில உலகக் காரித்தாஸ் அமைப்பும் இணைந்து, 'கடவுளின் சாயலில் படைக்கப்பட்டு, அடிமைகளாக நடத்தப்படுதல் - கிறிஸ்தவ அர்ப்பணிப்பு' என்ற மையக் கருத்துடன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் அனைத்துலக தொழில் நிறுவனமான ILOவின் கணிப்புப்படி, இன்றைய உலகில் 24 இலட்சம் பேர் மனித வர்த்தகத்தின் பாதிப்புக்களை ஒவ்வொரு நாளும் உணர்ந்து வருகின்றனர் என்று சொல்லப்படுகிறது.

உலக அளவில் மிகவும் ஆதாயம் ஈட்டித்தரும் மனித வர்த்தகத்தை வேரறுக்க, கத்தோலிக்கத் திருஅவையின் அனைத்து நிறுவனங்களும், அமைப்புக்களும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய அவசியத்தையும் இவ்வறிக்கை வலியுறுத்தியுள்ளது.

"மனிதர்கள் விலைப்பொருள்களைப் போல், வாங்கப்படுவதும், விற்கப்படுவதும் இவ்வுலகில் ஒருபோதும் நிகழக்கூடாது. இத்தகைய வர்த்தகத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபடுவோர் அனைவரும், அநீதிக்குத் துணைபோகின்றனர்" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு கூற்று, இவ்வறிக்கையின் ஆரம்ப வரிகளாக அமைந்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.