2015-04-29 16:14:00

நேபாளத்திற்கு, காரித்தாஸ் 25 இலட்சம் யூரோக்கள் நிதி உதவி


ஏப்.29,2015. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு, காரித்தாஸ் அமைப்பு இதுவரை 25 இலட்சம் யூரோக்கள், அதாவது, 17 கோடியே, 50 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள நிதி உதவி வழங்கியுள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட நில அதிர்வுகள் மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன என்றும், பெரும்பாலான மக்கள், மழையிலும், பனியிலும் கூடாரங்களில் தங்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் நேபாள காரித்தாஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், அருள்பணி பயஸ் பெருமனா (Pius Perumana) அவர்கள் கூறினார்.

மக்கள் தங்குவதற்கு, தற்காலிகமான கூடாரங்கள் அமைப்பது, குடிநீர், உணவு வழங்குவது ஆகியவை, காரித்தாஸ் தற்போது மேற்கொண்டு வரும் முக்கியப் பணிகள் என்று அருள்பணி பெருமனா அவர்கள் சுட்டிக்காட்டினார்.

25 யூரோக்கள் வழங்கினால், ஒரு குடும்பம் ஒரு மாதம் உணவு பெறும்; 10 யூரோக்கள் வழங்கினால், மூன்று குடும்பங்கள் தங்கக் கூடிய கூடாரம் அமைக்க உதவியாக இருக்கும் என்ற வார்த்தைகள் அடங்கிய விண்ணப்பங்களை, இத்தாலியக் காரித்தாஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.