2015-04-29 16:06:00

நிலநடுக்கத்தின் தாக்கம்: 3 மீட்டர்கள் நகர்ந்த காத்மாண்டு


ஏப்.29,2015. நேபாளத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தின் எதிரொலியாக தலைநகர் காத்மாண்டுவுக்கு கீழுள்ள பெரும்பாறைகள் தெற்கு நோக்கி பத்தடி இடம்பெயர்ந்துள்ளன; ஆனால் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாறுதல் எதுவும் இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பூமி வழியே சென்ற ஒலி அலைகளின் தரவுகளின் படி தலைநகர் காத்மாண்டுவுக்கு கீழுள்ள பூமியின் பாறை 3 மீட்டர்கள் தெற்கு நோக்கி நகர்ந்துள்ளது. இது மிகப்பெரிய இடப்பெயர்வு என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக டெக்டானிக் (tectonics) ஆய்வியல் நிபுணர், ஜேம்ஸ் ஜாக்சன் அவர்கள் கூறினார்.

இந்தியாவைச் சுமக்கும் கண்டத்தட்டு, ஐரோப்பா, ஆசியாவை தாங்கும் கண்டத்தட்டை நோக்கி ஆண்டுக்கு 2 செமீ நகர்கிறது. தற்போது ஏற்பட்ட நிலநடுக்கம், இந்த இரண்டு கண்டத்தட்டுகளுக்கு இடையே உருவானது என்று சொல்லப்படுகிறது.

டர்ஹாம் (Durham) பல்கலைக்கழக புவி அறிவியல் துறையைச் சேர்ந்த மார்க் ஆலன் என்பவர், இரண்டு கண்டத்தட்டுகளுக்கு இடையே இருக்கும் இடைவெளிக்கோடு, (fault) தெற்கு நோக்கி 3 மீட்டர்கள் நகர்ந்தது என்றும், இந்த கோட்டின் மேல் எவரெஸ்ட் சிகரம் இல்லாததால் இவ்வளவு பலமான இடப்பெயர்வு இருந்தும் அதன் உயரத்தில் மாறுதல் ஏற்படவில்லை என்றும் கூறினார்.

எடின்பர்க் (Edinburgh) பல்கலைக்கழகப் பேராசிரியர், இயன் மெயின் அவர்கள்,

நிலநடுக்கம் காரணமாக பாறைகள் பூமிக்கு அடியில் இடப்பெயர்வு கண்டுள்ளதால், அருகில் உள்ள மற்ற இடைவெளிக்கோடுகளில் அழுத்தம் அதிகரிக்கவும், இதனால் சிலமாதங்களுக்கு நிலநடுக்கங்கள் இப்பகுதியில் நீடிக்கவும் வாய்ப்புள்ளது என்று எச்சரித்துள்ளார்.

ஆதாரம் : TheGuardian / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.