2015-04-29 15:52:00

அமைதி ஆர்வலர்கள் :1979ல் நொபெல் அமைதி விருது(அன்னை தெரேசா)


ஏப்.29,2015. “அன்பிற்குத் தடை என்றால் அந்த வேலிகளைத் தாண்டவே விரும்புவேன்”. இந்தக் கூற்றுக்கு உரிமையாளர் யார் என்று தெரிந்திருந்தால் 1979ம் ஆண்டு நொபெல் அமைதி விருதுக்கும் சொந்தக்காரர் யார் என்று நமக்குத் தெரிந்துவிடும். அன்பின் அட்சய பாத்திரமான நம் அருளாளர் அன்னை தெரேசாதான் 1979ம் ஆண்டு நொபெல் அமைதி விருது பெற்றவர்கள். இந்த விருது மட்டுமல்ல, 1962ல் Ramon Magsaysay விருது, 1971ல் திருத்தந்தை 23ம் ஜான் முதல் அமைதி விருது, கென்னடி விருது, 1972ல் நேரு விருது, 1975ல் Albert Schweitzer அனைத்துலக விருது, 1980ல் இந்தியாவின் பாரத ரத்னா விருது, 1985ல் அமெரிக்க அரசுத்தலைவர் விடுதலைப் பதக்கம் என, பல்வேறு விருதுகளையும் பெற்றிருப்பவர் அன்னை தெரேசா. நம்மில் எல்லாரும் பெரிய காரியங்களைச் செய்ய முடியாது. ஆனால் சிறிய காரியங்களை மிகுந்த அன்போடு செய்ய முடியும் என்று உதிர்த்துள்ள அன்னை தெரேசா, 1997ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி தனது 87வது வயதில் இறைவனடி சேர்ந்தார். இவர் 2003ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டார். இவர் உலக இளையோர் தினத்துக்குப் பாதுகாவலர்.

கருணையின் உண்மை உருவமான அன்னை தெரேசாவிடம், ஒருமுறை உலக அமைதியை எப்படி ஊக்குவிப்பது என்று கேட்கப்பட்டது. அப்போது அவர், “வீட்டிற்குச் சென்று உங்கள் குடும்பத்தை அன்புகூருங்கள்” என்று சொன்னார். “அன்பு தேங்கி இருக்க முடியாது, அப்படி இருந்தால் அதற்கு அர்த்தமும் கிடையாது, அன்பு செயலில் வெளிப்பட வேண்டும், அச்செயல்தான் சேவை” என்றும், “தண்டனை கொடுப்பதற்குத் தாமதம் செய். ஆனால், மன்னிப்பதற்குச் சிந்தனைகூட செய்யாதே” என்றும் கூறியவர் இவர். தாய்மையின் உன்னத அடையாளமான அருளாளர் அன்னை தெரேசா அவர்கள், 1979ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி நொபெல் அமைதி விருதைப் பெற்று உரையாற்றிய போது, “மிகச் சிறியோராகிய என் சகோதரர்களுக்கு நீங்கள் எது செய்தாலும் அதை எனக்கே செய்கின்றீர்கள்” என்ற இயேசுவின் வார்த்தைகளைக் குறிப்பிட்டுப் பேசினார். “ரொட்டிக்கான பசியை நீக்குவதைவிட அன்புக்கான பசியை அகற்றுவது மிகவும் கடினம். அன்புக்கான பசியை நம் வீடுகளிலே நாம் காண்கிறோம்” என்று சொல்லி, தனது ஓர் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார் அன்னை தெரேசா.

“ஒருமுறை, முதியோர் பராமரிப்பு இல்லம் ஒன்றுக்குச் சென்றேன். அங்கே இருந்த வயதானவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும், அழகான பொருள்களும் இருந்தன. ஆனால் ஒவ்வொருவரும் கதவையே பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்கள் முகத்தில் புன்சிரிப்பு இல்லை. நம் வயதானவர்களில், ஏன் அவர்கள் இறக்கும் நேரத்தில்கூட புன்சிரிப்பைப் பார்த்த நான், எல்லா வசதிகளும் இருந்தும் இந்த இல்லத்தில் வயதானவர்கள் கதவையே வெறித்துப் பார்த்தபடி இருக்கிறார்கள் என்று அவ்வில்லச் சகோதரிகளிடம் கேட்டேன். அதற்கு அச்சகோதரிகள், தங்களின் மகன் அல்லது மகள் யாராவது தங்களைப் பார்க்க வருவார்கள் என்ற நம்பிக்கையில் இப்படி ஒவ்வொரு நாளும் கதவையே பார்த்துக் கொண்டிருக்கின்றனர், தாங்கள் மறக்கப்பட்டுவிட்டோம் என்ற எண்ணத்தால் இவர்கள் அதிகம் காயப்பட்டுள்ளனர் என்று      கூறினர். ஆம். இந்த அன்பில் ஏழ்மை, அன்புசெலுத்தாமல் புறக்கணிக்கப்படுவது நம் குடும்பங்களில் உள்ளது, நம் குடும்பங்களிலே தனிமை உணரப்படுகின்றது.

மேலை நாடுகளில் பல இளைஞரும், இளம்பெண்களும் போதைப்பொருளுக்கு அடிமையாக உள்ளனர். இதற்குக் காரணத்தைக் கண்டறிய நான் முற்பட்டபோது, இவர்களைக் குடும்பங்களில் ஏற்பதற்கு யாரும் இல்லை, தந்தையும் தாயும் பரபரப்புடன் இருப்பதால் பிள்ளைகளுக்கெனச் செலவிடுவதற்கு நேரம் இல்லை, பெற்றோர்கள் நிறுவனங்களில் வேலை செய்கின்றனர், ஆனால் பிள்ளைகளோ தெருவில் அலைந்து ஏதாவது ஒரு தீய பழக்கத்துக்கு உள்ளாகின்றனர். நாம் அமைதி பற்றிப் பேசுகிறோம், ஆனால் அமைதியைத் தகர்க்கக்கூடிய காரியங்கள் உள்ளன. கருக்கலைப்பு, இன்று அமைதியை அழிப்பதில் மிகப்பெரிய பங்காற்றுகின்றது. நம் பெற்றோர் நம்மை விரும்பியிருக்காவிடில் இன்று நாம் இங்கே இல்லை. நம் குழந்தைகளை நாம் விரும்புவோம், அவர்கள்மீது அன்பு செலுத்துவோம். ஏழைகள் மாபெரும் மனிதர்கள். அவர்கள் நமக்கு பல அழகான காரியங்களைக் கற்றுத் தருகின்றனர். ஒருநாள் ஓர் ஏழை மனிதர் என்னிடம் வந்து, கற்பு வார்த்தைப்பாடு கொடுத்துள்ள நீங்கள், குடும்பத்தைத் திட்டமிடல் பற்றி போதிப்பதற்குச் சிறந்தவர்கள், ஏனெனில் இது, ஒருவர் ஒருவர் மீது காட்டும் அன்பினால் ஏற்படும் சுயக்கட்டுப்பாடாகும் என்று சொன்னார். இந்த ஏழைகளிடம் உண்பதற்கு உணவு இல்லை, வாழ்வதற்கு வீடு இல்லை, ஆயினும் மிக நல்ல மனிதர்கள்.

மக்களின் மனதில் நாம் சமூக சேவை செய்பவர்களாகத் தோன்றலாம், ஆனால், நாங்கள் உண்மையில் உலகின் இதயத்தில் தியானம் செய்பவர்கள். ஏனெனில் கிறிஸ்துவின் உடலை 24 மணி நேரமும் தொடுகிறோம். இந்தப் பிரசன்னத்திற்கு எங்களுக்கு 24 மணி நேரம் உள்ளது. நீங்களும் உங்கள் குடும்பங்களில் இறைவனின் பிரசன்னத்தைக் கொண்டுவர முயற்சி செய்யுங்கள். ஏனெனில் சேர்ந்து செபிக்கும் குடும்பம், சேர்ந்து வாழும் குடும்பமாகும். நம் குடும்பங்களில் அமைதியை அழிப்பதற்கோ, அல்லது அதனைக் கொண்டுவருவதற்கோ குண்டுகளும் துப்பாக்கிகளும் தேவையில்லை, சேர்ந்து வாழ்ந்தாலே, ஒருவரையொருவர் அன்புகூர்ந்தாலே அமைதியும் மகிழ்வும் நிலவும். அதன்மூலம் இவ்வுலகிலுள்ள தீமைகளை நாம் களைய முடியும். இவ்வுலகில் அவ்வளவு துன்பமும் வெறுப்பும், வேதனையும் நிலவுகின்றன. நாம் நம் வீட்டில் செபிப்பதன் வழியாக, நம் தியாகத்தின் வழியாக அவற்றை அகற்றலாம். அன்பு முதலில் வீட்டில் ஆரம்பிக்கின்றது. நாம் எவ்வளவு செய்கிறோம் என்பதல்ல, நாம் செய்வதை எவ்வளவு அன்புடன் செய்கின்றோம் என்பதையே இறைவன் விரும்புகிறார். எனவே அன்பை முதலில் உங்கள் குடும்பங்களில் தொடங்குங்கள். உங்கள் குடும்பத்தினருக்கு  அந்த அன்பின் நற்செய்தியாக இருங்கள்”.             

சில காலத்திற்கு முன்னர் கல்கத்தாவில் எங்களுக்கு சர்க்கரை கிடைப்பதற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. இச்செய்தி சிறாருக்கு எப்படி தெரிய வந்தது எனத் தெரியவில்லை. ஒரு நான்கு வயது இந்து சிறுவன் வீட்டிற்குச் சென்று, நான் மூன்று நாள்களுக்கு சர்க்கரை எடுக்க மாட்டேன், அதனை அன்னை தெரேசாவின் பராமரிப்பில் வாழும் சிறாருக்குக் கொடுப்பேன் என்று கூறினான். மூன்று நாள்கள் சென்று, அச்சிறுவனை அவனின் அப்பாவும் அம்மாவும் எங்கள் இல்லத்துக்கு அழைத்து வந்தனர். இச்சிறுவனுக்கு எனது பெயரை முழுமையாய் உச்சரிக்கக்கூடத் தெரியாது. ஆனால் அவன் தனது அன்பை பகிர்ந்துகொள்ளத் தெரிந்து வைத்திருந்தான். இப்படித்தான் உங்கள் அனைவரிடமிருந்தும் நான் அன்பைப் பெறுகிறேன். இவ்வாறெல்லாம் 1979ல் நொபெல் அமைதி விருதைப் பெற்ற நிகழ்வில் உரையாற்றினார் அருளாளர் அன்னை தெரேசா.  

தற்போதைய மாசிடோனியக் குடியரசின் Uskup நகரம், அக்காலத்தில் ஒட்டமான் பேரரசின் Skopje நகரமாக இருந்தது. இந்நகரில் 1910ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி பிறந்த Agnes Gonxha Bojaxhinக்கு, அக்கா Aga, அண்ணன் Lasar என இரு உடன் பிறந்தவர்கள். Gonxha என அழைக்கப்பட்ட இவர், தனது 18வது வயதில் அயர்லாந்து சென்று லொரேட்டோ சகோதரிகள் சபையில் சேர்ந்தார். அதற்குப் பின்னர் இவர் தனது தாயையோ சகோதரியையோ பார்க்கவே இல்லை. அயர்லாந்தில் ஆங்கிலம் கற்ற பின்னர், 1929ம் ஆண்டில் இந்தியாவின் டார்ஜிலிங் சென்று லொரேட்டோ சபையில் துறவுப் பயிற்சி பெற்றார். 1931ம் ஆண்டில் துறவு வாழ்வில் வார்த்தைப்பாடுகளைக் கொடுத்தபோது லிசிய நகர் புனித தெரேசாவின் பெயரை ஏற்றார் Gonxha. அன்றிலிருந்து தெரேசா என்று பெயருடன் தனது புது வாழ்வைத் தொடங்கினார் இவர். கல்கத்தாவின் கிழக்கிலுள்ள Entallyல் லொரேட்டோ சபையினரின் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியபோது, 1937ம் ஆண்டு மே 14ம் தேதி துறவு வாழ்வில் இறுதி அர்ப்பணத்தை எடுத்தார்.

இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருந்த காலம் அது. 1943ம் ஆண்டில் வங்களாத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. இதில் கல்கத்தாவில் மக்கள் வேலையின்றி, பணமுமின்றி பசிக்கொடுமை தாங்காமல் பெருமளவில் இறந்தனர். அடுத்து, இந்தியாவை இரண்டாகப் பிரித்து பாகிஸ்தானை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையில், 1946ம் ஆண்டு ஆகஸ்டில் ஏற்பட்ட இந்து-முஸ்லிம் வன்முறைக் கலவரம். இதில் கல்கத்தா கடுமையாய்ப் பாதிக்கப்பட்டது அருள்சகோதரி தெரேசா, ஆசிரியப் பணியை ஆர்வமுடன் ஆற்றிவந்த போதிலும், இந்த வன்முறைகளாலும், பஞ்சத்தாலும் மக்கள் அனுபவித்த துன்பங்கள் அவரை அதிகம் பாதித்தன. அவர்களின் நலவாழ்வுக்கு வழிசெய்ய வேண்டும் என்ற அருள்சகோதரி தெரேசாவின் உந்துதலுக்கு லொரேட்டா சபையின் விதிமுறைகள் உதவவில்லை. எனவே 1948ம் ஆண்டில் லொரேட்டோ சபையைவிட்டு விலகி கல்கத்தாவில் ஏழைகள் மத்தியில் முழுநேரப் பணியைத் தொடங்கினார் அருள்சகோதரி தெரேசா. இந்திய மரபு ஆடையான சேலையை அணிந்துகொண்டார்.

லொரேட்டோ சபையை விட்டுவந்த முதல் ஆண்டுகள் எந்த வருவாயுமின்றி, உணவு மற்றும் பிற தேவைகளுக்காகத் தர்மம் எடுக்க நேர்ந்தது. இதில் அதிகத் துன்பம், சந்தேகம் மற்றும் தனிமையை எதிர்கொண்டார். கடுமையான சூறாவளி மற்றும் வேதனையான துன்பம் அனுபவித்த அந்த நாள்கள் பற்றி தனது குறிப்பேட்டில், “சிலுவையின் வறுமையால் மூடப்பட்ட, சுதந்திர அருள் சகோதரியாக வாழ என்னை நம் ஆண்டவர் விரும்புகிறார். ஏழைகளின் வறுமை அம்மக்களுக்கு மிகவும் கடினமானது. நான் வீடு தேடி நடந்தேன், நடந்தேன். என் கால்களும் கைகளும் சோர்வடைந்தன. எனது உடலும் மனமும் வலித்தன. வசதியான வாழ்வு வாழ்ந்த லொரேட்டோ சபைக்கு மீண்டும் சென்று விடலாமா என்ற சோதனையும் வந்தது. ஆயினும், ஆண்டவரது விருப்பம் என்னில் நிறைவேறட்டும் என விட்டுவிட்டேன். ஒரு துளி கண்ணீர்கூட நான் சிந்தவில்லை” என எழுதி வைத்துள்ளார் அன்னை தெரேசா. வத்திக்கானின் அனுமதியுடன் 1950ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ஒரு மறைமாவட்ட சபையைத் தொடங்கினார். ஆதரவின்றி இருப்பவர்கள் மாண்புடன் இறப்பதற்கு உதவும் வகையில், 1952ம் ஆண்டில் முதல் இல்லத்தைத் தொடங்கினார். இந்திய அதிகாரிகளின் உதவியுடன் கைவிடப்பட்டிருந்த காளி கோவிலை, ஏழைகள் இறப்பதற்குரிய இலவச இல்லமாக மாற்றினார். தொழு நோயால், வறுமைப் பிணியால், காச நோயால், எய்டஸ் நோயால், வாழ்வின் ஏமாற்றத்தால், அவமானத்தால், அன்பற்ற வாழ்க்கை தந்த விரக்தியால் வெந்துவிட்ட நெஞ்சங்களுக்கு அன்னை தெரேசா இல்லங்களைத் தொடங்கினார். நடைபாதையிலே வாழ்க்கையை முடித்தவர்கள் அன்னை தெரேசாவின் மடியிலே மாண்புடன், மகிழ்வுடன் உயிர்விட்டனர். ஆதரவற்ற, புறக்கணிக்கப்பட்ட குழந்தைகளின் அன்பு மடியானது அன்னை தெரேசாவின் உள்ளம். திருநற்கருணை ஆண்டவரிடம் குறைந்தது ஒரு மணி நேரம் செபித்த பின்னரே அன்றாட வேலையைத் தொடங்கினார் இவர். 13 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்ட பிறரன்பு மறைப்பணியாளர்கள் சபை, அன்னை தெரேசா இறந்த 1997ம் ஆண்டில் நான்காயிரத்துக்கு மேற்பட்ட சகோதரிகளைக் கொண்டிருந்தது. வரலாற்றில் சாகாவரத்தைக் கொண்டுள்ள, மாபெரும் அன்புப் பணிபுரிந்த அருளாளர் அன்னை தெரேசாவின் வாழ்வு நமக்குப் பாடமாகட்டும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.