2015-04-28 14:27:00

விவிலியத் தேடல் – இரு புதல்வர்கள் உவமை – பகுதி - 4


'இரு புதல்வர்கள் உவமை'யை நிறைவு செய்துவிட்டு, அடுத்த உவமைக்குள் இவ்வாரம் அடியெடுத்து வைக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால், நேபாளத்தில் நிகழ்ந்த நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து, இளையோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டதும் என் எண்ணத்தை மாற்றி, இந்த உவமையில் மீண்டும் பயணிக்கத் தூண்டின. மேலும்,  ஏப்ரல், மே மாதங்கள், இளையோருக்கு முக்கியமான மாதங்கள். தாங்கள் எழுதியத் தேர்வின் முடிவுகளை எதிர்நோக்கிக் காத்திருக்கும் இளையோரைப் பற்றிய எண்ணம், நம்மை மீண்டும் இந்த உவமைக்கு அழைத்து வந்துள்ளது.

இளையோர் என்றதும், பொதுவாக, பல முற்சார்பு எண்ணங்கள் நம் மனங்களில் தோன்றும். இளையோர், உணர்வுப் பூர்வமாகச் செயல்படுகிறவர்கள், சமுதாய அக்கறை அதிகமின்றி, தங்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் என்பவை, நமது முற்சார்பு எண்ணங்களில் சில. நாம் சிந்தித்துவரும் உவமையின் நாயகர்களான இரு மகன்களும், நமது முற்சார்பு எண்ணங்களை உறுதிசெய்யும் வகையில் நடந்துகொள்கின்றனர். இருவரும் தந்தையின் கட்டளையைக் கேட்டதும், உடனே, ‘முடியாது’, என்றும், ‘செய்கிறேன்’ என்றும், உணர்வுப்பூர்வமான பதில் தருகின்றனர். பின்னர், தாங்கள் சொன்னதற்கு முரணாகச் செய்கின்றனர். இவ்விரு இளையோரையும் பின்னணியாகக் கொண்டு, நேபாள இளையோரையும், தங்கள் தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கும் இளையோரையும் இந்த உவமையுடன் இணைத்து, நம் தேடலைத் தொடர்வோம்.

முதலில் நேபாள இளையோரைப் பற்றிய சிந்தனைகள்... ஏப்ரல் 25, கடந்த சனிக்கிழமையன்று, நேபாளத்தில் பெரும் அழிவை உருவாக்கிய நிலநடுக்கத்தில், இதுவரை 4,300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சனிக்கிழமை 700 என்று ஆரம்பித்த இந்த எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் கூடியவண்ணம் உள்ளது. பல்லாயிரம் கட்டடங்கள் தரைமட்டமாயின. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட நில அதிர்வுகள், மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன. கட்டடங்கள் பல பாதிக்கப்பட்டிருப்பதால், மக்கள் திறந்த வெளியில் தங்கியுள்ளனர். இந்நிலையில், அங்கு பெய்துவரும் மழையால் மீட்புப் பணிகள் தடைபட்டுள்ளன. மின்சாரமும், குடிநீரும் இல்லை; தங்கும் இடமும், உணவும் இல்லை. மருத்துவ உதவிகளும் தட்டுப்பாட்டில் உள்ளன. இவ்விதம், வேதனை தரும் செய்திகளே, நேபாளத்திலிருந்து வெளிவந்தவண்ணம் உள்ளன.

இந்த வேதனைச் செய்திகளின் நடுவில், ஒரு சில நம்பிக்கைச் செய்திகளும் வெளியாகியுள்ளன. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளுக்கிடையே நிலவிவரும் பகைமை உணர்வுகளைப் புறந்தள்ளிவிட்டு, பூட்டான் பிரதமர், Tshering Tobgay அவர்கள், நேபாளப் பிரதமர், Sushil Koirala அவர்களை நேரில் சந்தித்து, பூட்டான் அரசர், அந்நாட்டு அரசு அதிகாரிகள், மக்கள் ஆகியோரின் ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துள்ளார்.

பல வழிகளிலும் நம்பிக்கை இழந்து தவிக்கும் நேபாள மக்களிடையே, நம்பிக்கை நட்சத்திரங்களாக அந்நாட்டு இளையோர் செயல்பட்டு வருகின்றனர். நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு சில மணித்துளிகளில், இளையோர் ஆயிரக்கணக்கில் கூடிவந்தனர். இடிபாடுகளை நீக்கும் பெரும் கருவிகள் ஏதும் இன்றி, தங்கள் இரு கைகளையும் கொண்டு பணிகளைத் துவக்கினர். இவ்விளையோரில் ஒரு சிலரே முகத்திற்கு தற்காப்புப் பட்டைகள் அணிந்திருந்தனர். பெரும்பாலான இளையோர், முகக் கவசமோ, கையுறைகளோ இல்லாமல் பணியாற்றியதை, செய்திகளில் காண முடிந்தது. இத்திங்களன்று வெளியான செய்திகளில், இந்தியாவின் பல பெருநகரங்களில், நேபாள மக்களுக்காக, இளையோர் நிதி திரட்டியதையும் செய்திகளில் வாசித்தோம். தங்கள் பாதுகாப்பைக் குறித்து அதிக அக்கறை கொள்ளாமல், சமுதாய அக்கறையோடு பணியாற்றிய இவ்விளையோர் உண்மையில் செயல் வீரர்களே!

செயல்வீரரையும், வாய்ச்சொல் வீரரையும் பற்றி சென்றவாரத் தேடலில், சிந்தித்தோம். எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல், விளம்பரத்தைத் தேடாமல், நேபாளத்தில், அமைதியாகப் பணியாற்றிவரும் செயல்வீரர்களான இவ்விளையோருக்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

செயல்வீரர்களைப் பற்றி சிந்திக்கும்போது, 'வாய்ச்சொல் வீரர்களை'யும் சிந்திக்காமல் இருக்கமுடியாது. இவ்விரு குழுக்களையும் ஒப்புமைப்படுத்தி, Think PME (Project Management and Engineering) என்ற நிறுவனத்தின் இயக்குனர், ரிச்சர்ட் கொன்சாலஸ் (Richard Gonzalez) அவர்கள் வெளியிட்டுள்ள எண்ணங்கள் நமக்கு உதவியாக அமைந்துள்ளன. “Doers and Sayers: the Ugly Truth”, அதாவது, "செய்பவர்களும் சொல்பவர்களும்: அவலமான உண்மை" என்ற தலைப்பில் கொன்சாலஸ் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையின் ஒரு சில பகுதிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

கூடைப்பந்து விளையாட்டில், வீரரும், பின்னர், பயிற்சியாளருமாக இருந்த ஜான் வுட்டென் (John Wooden) என்பவற்றின் கூற்றுடன், கொன்சாலஸ் அவர்களின் கட்டுரை ஆரம்பமாகிறது. "நீ தவறேதும் செய்யவில்லை என்றால், நீ ஒன்றுமே செய்யவில்லை என்று பொருள். செயல்களில் இறங்குவோர், தவறுகளும் செய்கிறார்கள்" என்று ஜான் வுட்டென் அவர்கள் கூறுவது, நம் அனுபவத்தை எதிரொலிக்கிறது. ஓரிரு முறையாகிலும் கீழே விழாமல், சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ள முடியாது; ஓரிரு முறையாகிலும் மூழ்கி, மூச்சுத் திணறாமல், நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது. சைக்கிள் ஓட்டுவதையும், நீச்சல் அடிப்பதையும் பற்றி, நீண்ட உரைகள் கேட்பதால், இக்கலைகளைக் கற்றுக்கொள்ள முடியாது.

'வாய்ச்சொல் வீரர்களை'ப்பற்றி பாரதியார் எழுதிய 'நெஞ்சில் உரமுமின்றி' என்ற கவிதை வரிகள், சென்ற வார விவிலியத் தேடலின் இறுதியில் நாம் மேற்கொண்ட ஓர் ஆன்மீக ஆய்வுக்குப் பயன்பட்டது. அதுபோலவே, சொல்பவர்கள், செய்பவர்கள் இருவரையும் ஒப்புமைப்படுத்தி, கொன்சாலஸ் அவர்கள் கூறியுள்ள கருத்துக்கள், மீண்டும் ஓர் ஆன்மீக ஆய்வுக்குப் பயன்படுகிறது. சொல்பவர்களையும், செய்பவர்களையும் ஒப்புமைப்படுத்தும் ஒரு சில கருத்துக்கள் இதோ:

சொல்பவர்கள், தாங்கள் செய்ததாகச் சொல்லும் ஏராளமான வார்த்தைகளை ஒதுக்கிவிட்டு, உள்ளே பார்த்தால், அங்கு செய்பவர் ஒருவரின் உழைப்பைக் காணலாம்.

சொல்பவர்களுக்கு, உள்ளார்ந்த மதிப்பு ஏதும் இல்லாததால், வெளிப்புறத் தோற்றத்தில் அவர்கள் அதிக கவனம் செலுத்துவர். செய்பவர்கள், உள்ளார்ந்த மதிப்பு பெற்றிருப்பதால், வெளிப்புறத் தோற்றம் பற்றி கவலை கொள்வதில்லை.

சொல்பவர்கள், இருக்கும் நிலையைத் தக்கவைத்துக் கொள்வதில் கவனமாக இருப்பர்; மாற்றங்கள்,  அவர்களை அச்சுறுத்தும். செய்பவர்கள், மாற்றங்களை உருவாக்குவர்; அந்த மாற்றங்களால் பொதுநன்மை வெளிப்படும்போது, சொல்பவர்கள் அங்கு தோன்றி, தங்களாலேயே மாற்றங்கள் நிகழ்ந்ததென்று விளம்பரம் செய்வர்.

சொல்பவர்கள், எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை; இன்னும் அதிக ஊதியம், கூடுதல் அதிகாரம் போன்றவற்றிலேயே ஆர்வம் காட்டுவர். செய்பவர்கள், புதியவற்றைக் கற்பதிலும், அவற்றின் உதவியோடு, பயனுள்ளவற்றைச் செய்வதிலும் அதிக ஆர்வம் காட்டுவர்.

நம் ஆன்மீக ஆய்வின் முத்தாய்ப்பாக, இறைவனிடம் ஒரு வேண்டுதல் எழுப்புவோம். இந்த வேண்டுதல், அமெரிக்காவின் Kansas மாநில மக்களின் பிரதிநிதிகள் அவை (Senate) கூடிவந்தபோது சொல்லப்பட்ட ஒரு செபம். சில ஆண்டுகளுக்கு முன், Kansas மாநிலத்தின் செனட் உறுப்பினர்கள், தங்கள் அவையின் துவக்க செபத்தைச் சொல்ல, Joe Wright என்ற போதகரை அழைத்திருந்தனர். பொதுவாக, இத்தகையக் கூட்டங்களில், அரசியல்வாதிகளை மகிழ்விக்கும் வண்ணம், செபங்கள், பொதுப்படையாகச் சொல்லப்படும். ஆனால், நெஞ்சில் உரமும், நேர்மைத் திறமும் கொண்ட போதகர், Joe Wright அவர்கள் சொன்ன செபம், அங்கிருந்தோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அந்த அதிர்ச்சியைத் தாங்கமுடியாத சிலர், செனட் அவையைவிட்டு வெளியேறினர்.

பொதுவாக, அரசியல்வாதிகளை வாய்ச்சொல் வீரர்கள் என்று கூறுகிறோம். அவர்களில் பலர், சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்ற இரட்டை வேடமிட்டு வாழ்வதையும் அறிவோம். இத்தகைய இரட்டை வேடம் நமது வாழ்க்கையிலும் இடம்பெற்றுள்ளதா என்ற கேள்வியை எழுப்ப இந்த செபம் உதவியாக இருக்கும். இத்தகையதொரு செபத்தைக் கேட்கும் நாம், ஓர் உண்மையான ஆழ்மனத் தேடலில் ஈடுபடுவோம்:

வானகத் தந்தையே, உம்மிடம் மன்னிப்பு வேண்டி, உமது ஒளியையும், வழிகாட்டுதலையும் தேடி இங்கு கூடி வந்துள்ளோம். 'தீயவற்றை நல்லவை என்று சொல்வோரே, ஐயோ! உங்களுக்குக் கேடு' என்று நீர் கூறும் வார்த்தைகளை நாங்கள் அறிவோம். அவ்விதமே நாங்கள் செய்துள்ளோம் என்பதையும் உணர்கிறோம்.

எங்கள் ஆன்மீகச் சமநிலையைத் தொலைத்துவிட்டதால், எங்கள் மதிப்பீடுகளை மாற்றி அமைத்துள்ளோம்.

ஏழைகளை அநியாயமாய் வஞ்சித்துவிட்டு, அதை முன்னேற்றம் என்று சொன்னோம்.

கருவிலுள்ள குழந்தைகளைக் கொன்றுவிட்டு, அது அவரவர் தனிப்பட்ட உரிமை என்று சொன்னோம்.

குழந்தைகளைக் கண்டிக்கத் தவறிவிட்டு, அவர்களது சுயமரியாதையை வளர்ப்பதாகக் கூறினோம்.

அதிகாரத்தைத் தவறாகக் கையாண்டுவிட்டு, அதை அரசியல் என்றோம்.

அடுத்தவர் உடைமைகள் மேல் பேராசையை வளர்த்துவிட்டு, அதை வாழ்வின் இலட்சியம் என்று கூறினோம்.

ஆபாசங்களால் சமுதாயச் சிந்தனையைக் களங்கப்படுத்திவிட்டு, அதை, பேச்சுரிமை என்று சொன்னோம்.

எங்கள் உள்ளங்களை ஆராய்ந்து, எங்களைப் பாவங்களினின்று கழவி, விடுதலை தாரும். ஆமென்.

பேரழிவைச் சந்தித்துள்ள நேபாளத்தை மையப்படுத்தி இன்றையத் தேடலைத் துவக்கினோம். மீண்டும் அங்கு திரும்புகிறோம். இடிந்து தரைமட்டமாக இருக்கும் அந்நாடு, மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும்; அந்நாட்டை மீண்டும் உறுதியான அடித்தளத்தில் நிலைநிறுத்தும் பொறுப்பை அந்நாட்டு இளையோருக்கு இறைவன் வழங்கவேண்டும் என்று சிறப்பாக வேண்டிக்கொள்வோம்.

அதேபோல், தங்கள் தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கும் இளையோர், இந்த முடிவுகளால் எந்த ஓர் உணர்வுப் பூர்வமான, எதிர்மறையான முடிவும் எடுக்காமல், தங்களையும், மற்றவர்களையும் வாழ்விக்கும் ஆக்கப்பூர்வமான முடிவுகளை எடுக்க இறைவன் அவர்களை வழிநடத்தவேண்டும் என்றும் மன்றாடுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.