2015-04-28 16:23:00

மாற்றத்துக்கென தூய ஆவியார் அழைக்கும்போது அஞ்சத் தேவையில்லை


ஏப்.28,2015. தூய ஆவியாரின் உதவியின்றி நாம் எதையும் புரிந்து கொள்ள இயலாது, எனவே, நாம் என்ன செய்ய வேண்டுமென்பதை எல்லாக் காலங்களிலும் தேர்ந்து தெளிவதற்கு, தூய ஆவியாரை நமக்கு அருளும்படியாக இறைவனிடம் செபிப்போம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் காலை திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, எல்லா நாடுகளுக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட வேன்டுமென்ற இத்திருப்பலியின் முதல் வாசகத்தின் சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டபோது இவ்வாறு கூறினார்.

திருஅவை, தூய ஆவியாரின் வழிகாட்டுதலில் வரலாறு முழுவதும் எவ்வாறு பயணம்  செய்துள்ளது என்பதை மறையுரையில் விளக்கிய திருத்தந்தை, யூதரல்லாத மக்களுக்கு நற்செய்தி அறிவிப்பதற்கு எவ்வளவு நெருக்கடிகள் ஏற்பட்டன என்பதை திருத்தூதர் பணிகளில் வாசிக்கிறோம் என்றும் கூறினார்.

எசாயா இறைவாக்கினர் நூல் 60ம் பிரிவில், எல்லா நாடுகளுக்கும் நற்செய்தி அறிவிப்பது பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது, இறைவன் அனைத்தையும் புதியனவாக்குபவர் என்பதைப் பலர் புரிந்துகொண்டதுபோல் தெரியவில்லை என்றுரைத்த திருத்தந்தை, தூய ஆவியார் இந்தப் புதுப்பித்தல் பணியைச் செய்கிறார் என்றும் கூறினார்.

விந்தைகள் ஆற்றும் இறைவன் பற்றி அஞ்சத் தேவையில்லை என்றும், மாற்றத்துக்கென, ஓர் அடி முன்னோக்கி எடுத்து வை என்று தூய ஆவியார் கூறும்பொழுது நாம் பயப்படத் தேவையில்லை என்றும், தூய ஆவியாரின் வியப்புக்குரிய வேலையால் திருஅவை முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்றும் திருத்தந்தை கூறினார்.

திருஅவையின் முன்னேற்றம் தூய ஆவியாரின் வேலையாகும், இந்த ஆவியாரின் குரலைச் செபத்தின் மூலமே கேட்க முடியும், செபமின்றி தூய ஆவியாருக்கு இடமில்லை, எனவே தூய ஆவியாரை நாம் பெறுவதற்குச் செபிக்க வேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.