2015-04-28 16:13:00

படைப்பைப் பாதுகாப்பதற்கு அனைவருக்கும் தார்மீகக் கடமை உள்ளது


ஏப்.28,2015. மனிதர் வாழ்கின்ற நம் வீட்டுத் தோட்டமாகிய இறைவனின் படைப்பை பாதுகாத்துப் பேணுவதற்கு நம் அனைவருக்கும் அறநெறி சார்ந்த கடமை உள்ளது என்று கூறினார் திருப்பீட உயர் அதிகாரி ஒருவர்.

“வெப்பநிலை மாற்றமும், படைப்பின் கண்காணிப்பாளர்களும்” என்ற தலைப்பில், பாப்பிறை அறிவியல் கழகம் இச்செவ்வாயன்று வத்திக்கானில் நடத்திய ஒரு நாள் அனைத்துலக கருத்தரங்கில் உரையாற்றிய, திருப்பீட நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், படைப்பைப் பாதுகாப்பதில் உலகினர் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொண்டார்.

வெப்பநிலையில் மாற்றம் ஏற்படுவதற்கும், இயற்கைக் காடுகளும் சதுப்புநிலங்களும் அழிவதற்கும், மனிதரை நோய்கள் தாக்குவதற்கும், நிலம், நீர், காற்று என அனைத்தும் மாசுபடுவதற்கும் மனிதரே காரணம் என்று உரையாற்றிய கர்தினால் டர்க்சன் அவர்கள், நன்னெறி வாழ்விலும், இதயத்திலும் மாற்றம் இன்றி நாம் படைப்பின் பாதுகாவலர்களாகச் செயல்பட முடியாது என்று கூறினார்.

இப்புவியின் எழுநூறு கோடி மக்களில் குறைந்தது முன்னூறு கோடிப் பேர் கடும் வறுமையிலும், அதேநேரம், ஏறக்குறைய நூறு கோடிப் பேர் நிறைந்த செல்வத்திலும்    வாழ்கின்றனர், இன்றைய உலகம் 730 கோடி மக்களுக்குத் தேவைப்படும் உணவுக்கு அதிகமாகவே உற்பத்தி செய்கின்றது, ஆயினும் எண்பது கோடிக்கு மேற்பட்ட மக்கள் பசியால் வாடுவதையும் சுட்டிக் காட்டினார் கர்தினால் டர்க்சன். 

இயற்கைப் பேரிடர்களால் மக்கள் மடிவதையும் குறிப்பிட்டுப் பேசிய கர்தினால் டர்க்சன் அவர்கள், இப்பூமியைப் பாதுகாத்து, மனித சமுதாயத்தை மாண்புடையதாய் அமைப்பதற்கு, உலகினரின் ஒழுக்கநெறி வாழ்வில் மாற்றங்கள் தேவை என்று கூறினார்.

இக்கருத்தரங்கில், இத்தாலிய அரசுத் தலைவர் செர்ஜோ மத்தரெல்லா, ஈக்குவதோர் அரசுத்தலைவர் Rafael Correa Delgado,  ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் உட்பட பல தலைவர்கள், 20 மதத்தலைவர்கள், நொபெல் வேதியல் விருது பெற்ற Paul Crutzen அவர்கள் உட்பட 20 அறிவியலாளர்கள், 20 கல்வியாளர்கள் என, பல முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.