2015-04-28 16:26:00

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் திருத்தந்தை உதவி


ஏப்.28,2015. நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல் கட்டமாக, ஒரு இலட்சம் டாலரை, திருத்தந்தையின் பெயரால் அனுப்பியுள்ளது திருப்பீட கோர் ஊனும் பிறரன்பு அவை.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் திருத்தந்தை கொண்டிருக்கும் ஆன்மீக முறையிலான ஒருமைப்பாட்டுணர்வையும், தந்தைக்குரிய பாசத்தையும் வெளிப்படுத்தும் விதமாக, இந்நிதியுதவியை, நேபாளத் தலத்திருஅவைக்கு அனுப்பியுள்ளது கோர் ஊனும் அவை.

கடந்த ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி செப உரையின் இறுதியிலும் நேபாளத்திலும், அண்டை நாடுகளிலும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகத் திருத்தந்தை செபித்தார், மற்றும் கடந்த சனிக்கிழமையன்றே ஆறுதல் தந்தியையும் அனுப்பினார்.

நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் அந்நாட்டின் 34 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், எண்பது இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 10 இலட்சம் பேர் வீடிழந்துள்ளனர், நான்கு இலட்சம் கட்டிடங்கள் இடிந்துள்ளன, 14 இலட்சம் பேருக்கு அவசர உணவு உதவி தேவைப்படுகின்றது என்று ஐ.நா கூறுகிறது.

நேபாளத்தில் நிலநடுக்கத்தில் சிக்கித்தவித்த 56 தமிழர்கள் உள்ளிட்ட 2305 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.