2015-04-28 16:04:00

திருத்தந்தை, ஐ.நா. பொதுச் செயலர் சந்திப்பு


ஏப்.28,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இச்செவ்வாயன்று திருப்பீடத்தில் சந்தித்துப் பேசிய ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள், இச்சந்திப்பு, பல தலைப்புக்களில், பயனுள்ள ஒரு கலந்துரையாடலாக இருந்தது என்று கூறினார்.  

வருகிற செப்டம்பர் 25ம் தேதி ஐ.நா.பொது அவையில் உரையாற்றுவதற்கு இசைவு தெரிவித்திருப்பதற்கு திருத்தந்தைக்கு நன்றியும் தெரிவித்த பான் கி மூன் அவர்கள், சுற்றுச்சூழல் குறித்த திருத்தந்தையின் அடுத்த திருமடலை ஆவலோடு தான் ஆவலோடு எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் குறித்த விவகாரங்கள் மட்டுமல்ல, குடியேற்றதாரர், உலகில் போர்கள் இடம்பெறும் பகுதிகளில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடிகள் போன்ற விவகாரங்களிலும் கவனம் செலுத்தி ஐ.நா. நிறுவனம் உழைத்து வருகின்றது என்றும் திருத்தந்தையிடம் தெரிவித்தார் பான் கி மூன்.

திருத்தந்தையைச் சந்தித்த பின்னர், வெப்பநிலை மாற்றம் குறித்த வத்திக்கான் கருத்தரங்கிலும் உரையாற்றினார் பான் கி மூன்.

ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கிலிருந்து இத்தாலிக்கு வருவதற்கு மேற்கொண்ட கடல் பயணத்தில் 2014ம் ஆண்டில் மட்டும் ஏறக்குறைய 3,500 குடியேற்றதாரர் இறந்துள்ளனர். மேலும், குடியேற்றதாரர் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படாவிட்டால், 2015ம் ஆண்டில் ஏறக்குறைய 2 இலட்சம் குடியேற்றதாரர் இத்தாலிக்கு வருவார்கள் என இத்தாலிய அதிகாரிகள் கணித்துள்ளனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.