2015-04-28 14:21:00

கடுகு சிறுத்தாலும் – அரசியல்வாதி ஆவதற்குத் தேவையானவை


கிறிஸ்தவ மறையுரையாளராகப் பணியாற்றிவந்த ஒருவர், 20 வயது நிறைந்த தன் மகன், எவ்வித எதிர்காலத்தைத் தேர்ந்தெடுப்பார் என்று அறிய விழைந்தார். எனவே, தன் மகனுடைய அறையில் ஒரு விவிலியம், ஒரு கட்டு பண நோட்டுக்கள், ஒரு பாட்டில் மதுபானம் ஆகியவற்றை வைத்தார். மகன், விவிலியத்தை எடுத்தால், தன்னைப் போல் மறையுரையாளராக வருவார் என்றும், பணத்தை எடுத்தால், ஒரு வர்த்தகராக மாறுவார் என்றும், மதுபானத்தை எடுத்தால், குடிப் பழக்கத்தில் தன் வாழ்வை வீணாக்குவார் என்றும் தந்தை கணித்து வைத்தார். தன் மகன் வீடு திரும்பியதும், இவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பார் என்று பார்க்க ஆவலோடு காத்திருந்தார், தந்தை.

கல்லூரியிலிருந்து திரும்பிய மகன், அறைக்குள் சென்றதும், தந்தையும் அந்த அறையின் சன்னல் வழியே அங்கு நடப்பதைப் பார்த்தார். தன் மேசை மீதிருந்த பொருள்களைப் பார்த்த இளையவர், முதலில் விவிலியத்தை எடுத்துப் புரட்டினார். இதைக் கண்டதும், தந்தைக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. மகன், விவிலியத்தை தன் பைக்குள் வைத்தார். பின்னர், பண நோட்டுக் கட்டை எடுத்து முத்தமிட்டு, அதை தன் பாக்கெட்டில் வைத்தார். இதைக் கண்ட தந்தை சற்று குழம்பிப் போனார். அதன்பின், மகன் மது பானத்தை எடுத்து, சிறிது சுவைத்தார்.

இவற்றையெல்லாம் கண்ட தந்தை, "ஹும்... என் மகன் ஓர் அரசியல்வாதியாகப் போகிறார்!" என்று பெருமூச்சு விட்டபடியே அவ்விடம் விட்டு அகன்றார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.