2015-04-27 16:17:00

சிறார் உரிமைகள் காக்கப்பட ஒன்றிணைந்த நடவடிக்கை தேவை


ஏப்.27,2015. இன்றைய உலகில் பல்வேறு வழிகளில் குழந்தைகள் அடிமைகளாகவும், கொடுமையான முறையிலும் நடத்தப்படுவதைத் தடுக்கும் ஒன்றிணைந்த நடவடிக்கைகள் தேவைப்படுவதாக அறிவித்தார் கர்தினால் பீட்டர் டர்க்சன்.

திருப்பீடத்திற்கான ஸ்வீடன் தூதரகமும், திருப்பீடத்தின் சமூக அறிவியல் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் உரையாற்றிய திருப்பீட நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், உடல் உறுப்பு விற்பனை, பாலின நடவடிக்கை, இழிபொருள் இலக்கியம், போதைப்பொருள் கடத்தல், பிச்சையெடுத்தல், கட்டாயத் திருமணம், கட்டாய வேலை, சிறார் படைவீரர் என பல்வேறு வழிகளில் சிறார்கள் வன்முறைகளை அனுபவித்து வருகின்றனர் என்றார்.

ஏழ்மையும், பொருளாதார வளர்ச்சியின்மையும் கொண்ட நாடுகளில் வாழும் குழந்தைகளுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் மறுக்கப்படும்போது, இத்தகைய வன்முறைகள் அதிகரிக்கின்றன என மேலும் கூறினார் கர்தினால் டர்க்சன்.

இத்தகைய உரிமை மீறல்கள் இடம்பெறுவதற்கு அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பும், பாராமுகமும் ஒரு காரணமாக அமைகின்றன என கர்தினால் டர்க்சன் அவர்கள் மேலும் கூறினார்.

குழந்தைகளின் உரிமைகள் குறித்த இக்கருத்தரங்கில், ஸ்வீடன் நாட்டு அரசி, சில்வியாவும் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.