2015-04-24 16:05:00

திருத்தந்தை-இயேசுவோடு நடந்த முதல் சந்திப்பை மறக்கக் கூடாது


ஏப்.24,2015. நாம் முதல் முறையாக இயேசுவைச் சந்தித்த நாளை அவர் ஒருபோதும் மறப்பதில்லை, ஆதலால் இதனை நாம் எப்போதும் நினைவில் வைத்திருப்பதற்கு இறைவனின் அருளை இறைஞ்ச வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இவ்வெள்ளியன்று நிறைவேற்றிய திருப்பலியில், புனித பவுலடிகளார் அழைப்பின்  பற்றிய இத்திருப்பலியின் முதல் வாசகத்தை மையமாக வைத்து ஆற்றிய மறையுரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சந்திப்பு என்றால், நம் வாழ்வை மாற்றுவதற்கு இயேசு தேர்ந்தெடுக்கும் வழிகளாகும், இதற்கு, எதிர்க் கிறிஸ்துவாக இருந்து கிறிஸ்தவர்களைத் துன்புறுத்திய தர்சு நகர் பவுல் நல்ல எடுத்துக்காட்டு என்று கூறிய திருத்தந்தை, நற்செய்தியில் காணப்படும் பல்வேறு சந்திப்புகள் பற்றியும் குறிப்பிட்டார்.

திருத்தூதர்கள் யோவான், அந்திரேயா, பேதுரு, சமாரியப் பெண், குணமான தொழுநோயாளி, இயேசுவின் ஆடையின் விளிம்பைத் தொட்டுக் குணமான நோயாளிப்பெண் இப்படி இயேசுவைச் சந்தித்த பலரின் வாழ்வு மாறியது பற்றியும் விளக்கினார் திருத்தந்தை.

நாம் நம் அகவாழ்வை நேர்மையாக உற்றுநோக்கி, இயேசுவே, நீர் எனது வாழ்வை மாற்றிய அதனை எப்போது என்னிடம் கூறினீர்? என் வாழ்வில் ஓர் அடி முன்னோக்கி எடுத்து வைக்க எப்போது அழைத்தீர்? என இயேசுவிடம் கேட்போம் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்து நம்முடன் உறவு ஏற்படுத்த விரும்பிய அந்த நேரத்தை நாம் மறக்கக் கூடாது, அந்த முதல் சந்திப்பை, அந்த முதல் அன்பை நாம் மறக்காமல் இருப்பதற்கு வரம் கேட்போம் என்று தனது மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.