2015-04-24 15:48:00

திருத்தந்தை, செக் குடியரசுத்தலைவர் Zeman சந்திப்பு


ஏப்.24,2015. திருப்பீடத்துக்கும், செக் குடியரசுக்கும் இடையே நிலவும் உறவை மேலும் உறுதிப்படுத்தும் நோக்கத்தில், செக் குடியரசு அரசுத்தலைவர் Miloš Zeman அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார்.

ஏறக்குறைய முப்பது நிமிடங்கள் திருத்தந்தையைச் சந்தித்துப் பேசிய பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் Paul Gallagher ஆகிய இருவரையும் சந்தித்தார் செக் குடியரசுத் தலைவர் Zeman.

திருப்பீடத்துக்கும், அப்போதைய செக் மற்றும் சுலோவாக் கூட்டு குடியரசுக்கும் இடையே அரசியல் உறவு ஏற்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவாக (ஏப்ரல்19,1990) இச்சந்திப்பு நடைபெற்றது என்று அறிவித்தார் திருப்பீட செய்தித் தொடர்பாளர் அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி.

தற்போதை செக் குடியரசுக்கும் திருப்பீடத்துக்கும் இடையே நிலவும் உறவு திருப்தியாக உள்ளது என்றும், செக் நாட்டுக்கும் தலத்திருஅவைக்கும் இடையே ஒத்துழைப்பை, குறிப்பாக, கல்வி, கலாச்சாரம் மற்றும் பொதுநலப் பணிகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் விருப்பமும் இச்சந்திப்புக்களில் வெளிப்படுத்தப்பட்டது என்றும் கூறினார் அருள்பணி லொம்பார்தி.

உலகில் கிறிஸ்தவரின் நிலை மற்றும் மத்திய கிழக்கில் சிறுபான்மையினரின் நிலைமையும் இச்சந்திப்புக்களில் பேசப்பட்டுள்ளன.

மேலும், பிரேசில் நாட்டுக் கல்வியாளர் Ana Maria Freire மற்றும் அவருடன் சென்றிருந்த நான்கு பேரையும் இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.