2015-04-24 16:09:00

தகவல் தொழில்நுட்பங்கள்,வெறுப்புணர்வைப் பரப்புவதற்குச்சாதகம்


ஏப்.24,2015. உலகின் ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்களின் உயர்ந்த கலாச்சாரத்தையும், மரபுகளையும் கற்றுக்கொண்டு, நண்பர்களை உருவாக்குவதற்கு இளையோருக்கு இன்டெர்னெட் மற்றும் சமூக வலைத்தளங்கள் உதவுகின்றன என்று   திருப்பீட அதிகாரி ஒருவர் ஐ.நா.வில் இவ்வியாழனன்று கூறினார்.

இளையோர் வாழ்வில் சமூக வலைத்தளங்களின் பங்கு குறித்து ஐ.நா. பாதுகாப்பு அவையில் இடம்பெற்ற பொது விவாதத்தில் உரையாற்றிய, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பெர்னதித்தோ அவுசா அவர்கள்  இவ்வாறு தெரிவித்தார்

“வன்முறை நிறைந்த தீவிரவாதத்துக்கு எதிராகச் செயல்பட்டு அமைதியை ஊக்குவிப்பதில் இளையோரின் பங்கு” குறித்தும் விவாதிக்கப்பட்ட இக்கூட்டத்தில், உலகெங்கும் வேகமாக முன்னேறிவரும் தகவல் தொழில்நுட்பங்கள், இளையோர் மத்தியில், வெறுப்பு மற்றும் வன்முறைச் செய்திகளைப் பரப்புவதற்கும் சாதகமாக அமைந்துள்ளன என்று கவலை தெரிவித்தார் பேராயர் அவுசா.

பிரிந்த குடும்பங்கள், திருப்தியின்மை, சமூகத்தோடு ஒன்றிணையாமை,  வாழ்வதற்கான வாய்ப்புகளைத் தவறவிட்டநிலை, சமூக-கலாச்சார தனித்துவமின்மை போன்ற நெருக்கடிகளில் வாழும் இளையோரில், தீவிரவாத வன்முறைகள் தூண்டப்பட்டு அவர்கள் தீவிரவாத அமைப்புகளில் சேர்க்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார் பேராயர் அவுசா.

இளையோரில் உருவாகியுள்ள பல்வேறு தீவிரவாத எண்ணங்கள் களையப்படுவதற்கு, குடும்பங்களோடு இணைந்து, ஒருவரையொருவர் மதிக்கும் உரையாடலின் மதிப்பீடுகளில் சிறாருக்கும், இளையோருக்கும் மதிப்பீட்டுக் கல்வி வழங்கப்படுவது இன்றியமையாதது என்றும் கூறினார் பேராயர் அவுசா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.