2015-04-23 16:01:00

சிறார் மத்தியில் உரையாடல் கலாச்சாரத்தை வளர்க்க முயற்சி


ஏப்.23,2015. எகிப்து நாட்டின் மின்யா மாநிலத்தில் கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத்தலைவர்கள் இணைந்து ஏப்ரல் 22, இப்புதன் முதல் ஒரு கூட்டு முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

காப்டிக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை 2ம் Tawadros அவர்களும், இஸ்லாமிய மதத்தலைவர் Ahmad al-Tayyeb அவர்களும், ஆதரவு தரும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள், பள்ளிச் சிறுவர் சிறுமியரைச் சந்தித்து உரையாடல் கலாச்சாரத்தை வளர்க்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.

பல்வேறு மதங்களைச் சார்ந்த மாணவ, மாணவியர் தங்களுக்குள் சந்திக்கும்    கலாச்சாரத்தை வளர்த்துக் கொள்ளவும், சகிப்புத்தன்மை, ஒருவரை ஒருவர் மதிக்கும் மனநிலை இவற்றை கற்றுக் கொள்ளவும் இம்முயற்சி உதவுகிறது என்று மின்யா காப்டிக் கத்தோலிக்கப் பேராயர் Anba Botros Fahim Awad Hanna அவர்கள் Fides செய்திக்கு அனுப்பிய குறிப்பில் கூறியுள்ளார்.

காப்டிக் கத்தோலிக்க அருள்பணியாளர்கள், இஸ்லாமியப் போதகர்கள் என நாற்பதுக்கும்  மேற்பட்டோர் மின்யா மாநிலத்தில் துவக்கியிருக்கும் இம்முயற்சி, எகிப்தின் ஏனைய மாநிலங்களுக்கும் பரவும் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.