2015-04-22 16:58:00

வேதிய ஆயுதங்கள் முற்றிலும் ஒழிக்கப்படுமாறு ஐ.நா. அழைப்பு


ஏப்.22,2015. இவ்வுலகில் வேதிய ஆயுதங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுவரும் சூழலில், அவை முற்றிலும் ஒழிக்கப்படுமாறு உலக சமுதாயத்தைக் கேட்டுள்ளார் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன்.

நூறு ஆண்டுகளுக்குமுன் பெல்ஜியப் போர்க்களத்தில் வேதிய ஆயுதங்கள் முதன் முறையாகப் பயன்படுத்தப்பட்டதன் நினைவு நாள் இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்ட நிகழ்வுக்குச் செய்தி அனுப்பிய பான் கி மூன் அவர்கள், வேதிய ஆயுதங்கள் உலகில் முற்றிலும் ஒழிக்கப்படுமாறு கேட்டுக் கொண்டார்.

உலகில் முழுவதுமாக வேதிய ஆயுதங்களை ஒழிப்பதே, நூறு ஆண்டுகளுக்குமுன் வேதிய ஆயுதங்களுக்குப் பலியானவர்களுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்றும் அச்செய்தியில் கூறியுள்ளார் பான் கி மூன்.

பெல்ஜியத்தில் Ypresல் வேதிய ஆயுதங்கள் முதன் முறையாகப் பயன்படுத்தப்பட்டதன் விளைவாக, 1925ம் ஆண்டில் ஜெனீவாவில் வேதிய ஆயுதங்கள் பயன்பாட்டைத் தடைசெய்யும் உடன்பாடு ஏற்பட்டது என்பதையும் ஐ.நா. பொதுச் செயலர் நினைவுகூர்ந்துள்ளார். 

1915ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி பெல்ஜியத்தின் Ypresல் குளோரின் வாயு  பயன்படுத்தப்பட்டது. இரு ஆண்டுகளுக்கு முன்னர் சிரியாவில் இதே குளோரின் வாயு  ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆதாரம்  : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.