2015-04-22 16:11:00

திருத்தந்தையின் மறைக்கல்வி உரை – திருமண உடன்படிக்கை


ஏப்.22,,2015. கடந்த சில வாரங்களாக குடும்பம் குறித்த தன் சிந்தனைகளை புதன் மறைபோதகங்களில் பகிர்ந்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று, உரோம் நகர் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு அதே மறைக்கல்வி உரையின் தொடர்ச்சியாக, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான திருமண உடன்படிக்கை குறித்து எடுத்துரைத்தார்.

குடும்பம் குறித்த நம் மறைக்கல்வி உரையின் தொடர்ச்சியாக இன்று, ஆதி மனிதன் மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டது குறித்து நோக்குவோம் என இப்புதன் மறைக்கல்வியை துவக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். மண்ணிலிருந்து மனிதனை உருவாக்கினார் இறைவன். அவனைத் தோட்டத்தில் குடியமர்த்தினார். அங்கு மனிதன் படைப்புகளைப் பராமரிக்க வேண்டியிருந்தது. அங்கு மனிதன் தனியாக இருப்பதைக் கண்ட இறைவன், பெண்ணைப் படைத்தார். அவனுக்கு இணையாக, அவன் வாழ்வின் முழுமையின் ஒரு பகுதியாகப் படைக்கப்பட்ட பெண்ணுடன் தன் வாழ்வைப் பகிர்ந்து கொண்டான் மனிதன்.  ஒருவருக்கொருவர் ஒத்தளாவிய பண்புடன்கூடிய வாழ்வைக் கொண்டிருக்கவும், இருவரும் ஒன்றிணைந்து உடன்படிக்கையில் நுழையவும் ஆணும் பெண்ணும் படைக்கப்பட்டார்கள். ஆனால், பாவம் அவர்கள் வாழ்வில் நுழைந்து, அவர்களின் உறவில் முரண்பாட்டையும், சந்தேகத்தையும், நம்பிக்கைக் குறைவையும் கொணர்ந்தது. நாம் வரலாறு முழுவதும் இந்தப் பாவத்தின் கனிகளைக் காண்கிறோம், குறிப்பாக, பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளிலும், வன்முறைகளிலும், சுரண்டல்களிலும். ஒருவருக்கொருவர் நம்பிக்கையின்மைகளும், ஐயவாதங்களும், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான திருமண உடன்படிக்கையின் முக்கியத்துவத்தை, அண்மைக்காலத்தில் நம் கலாச்சாரத்திலிருந்து இழக்க வைத்துள்ளன. திருமண உடன்படிக்கையே ஒன்றிப்பை ஆழப்படுத்துவதுடன், அவர்களின் தனித்தன்மையின் மாண்பை பாதுகாக்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிலவும், உறுதியான, அதேவேளை, பலன் தரும் உடன்படிக்கை, சமுதாயத்தில் மதிப்பிழக்க வைக்கப்படும்போது, அது அனைவருக்கும் பெரிய இழப்பாகும், குறிப்பாக இளையோருக்கு. பாவங்களையும் பலவீனங்களையும் நாம் கொண்டிருந்தாலும், திருமண உடன்படிக்கைக்கு முக்கியத்துவம் வழங்க நாம் அழைப்புப் பெற்றுள்ளோம். இது ஓர் உயிர்த்துடிப்புடைய, சக்தியூட்டும் அழைப்பு. இந்த மிகப்பெரும் கொடை மீது சிறப்புக் கவனம் செலுத்தி அதனைப் பாதுகாக்கும் வானகத்தந்தையுடன் நாம் ஒத்துழைப்பது என்பது, இந்த அழைப்பை ஏற்று செயல்படுவதன் வழியாகவே.

இவ்வாறு தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.