2015-04-22 16:31:00

திருத்தந்தை பிரான்சிஸ் – இப்பூமியைச் சுரண்ட வேண்டாம்


ஏப்.22,2015. மனித சமுதாயம் தனது ஆதாயத்துக்காக இப்பூமியைச் சுரண்டவோ, தவறாகப் பயன்படுத்தவோ வேண்டாமெனக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 22 இப்புதனன்று பூமி தினம் கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு, இப்புதன் பொது மறைக்கல்விக்குப் பின்னர் இவ்வழைப்பை முன்வைத்தார் திருத்தந்தை.

இப்பூமி, பாதுகாக்கப்படவேண்டிய சூற்றுச்சூழல் மற்றும் பயிரிடப்பட வேண்டிய தோட்டம் என்றுரைத்த திருத்தந்தை, படைத்தவராம் இறைவனின் கண்கள் வழியாக இவ்வுலகைப் பார்க்குமாறும் கூறினார்.

இயற்கையோடு மனித சமுதாயம் கொண்டிருக்க வேண்டிய உறவு, பேராசை, சூழ்ச்சியோடு பயன்படுத்தல், சுரண்டல் ஆகியவற்றால் இருக்கக் கூடாது, மாறாக, படைப்புகளுக்கும் படைத்தவருக்கும் இடையே நிலவும் தூய்மையான நல்லிணக்க உணர்வோடும், மதிப்பு மரியாதையோடும் அது பாதுகாக்கப்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், வருகிற செப்டம்பரில் அமெரிக்க ஐக்கிய நாட்டுக்குச் செல்லும் திருத்தந்தை, முதலில் கியூபா செல்வார் என்றும், கியூப அதிகாரிகளும் ஆயர்களும் திருத்தந்தைக்கு அழைப்பு விடுத்திருப்பதாகவும் திருப்பீட செய்தித் தொடர்பாளர் அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள் அறிவித்தார். 

ஆதாரம்  : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.