2015-04-22 17:02:00

சமய, அரசியல் தலைவர்கள் தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை


ஏப்.22,2015. மக்களும், சமூகங்களும், நாடுகளும் பாகுபாட்டாலும், இனவெறியாலும் அதிகமாகத் துன்புறும் இக்காலத்தில் சகிப்பற்றதன்மைக்கு எதிராக துணிச்சலுடனும் தீர்மானமாகவும் மனித சமுதாயம் ஒன்றுசேர்ந்து செயல்படுமாறு கேட்டுள்ளனர் ஐ.நா.வின் மூத்த அதிகாரிகள்.

சகிப்புத்தன்மையையும், ஒப்புரவையும் ஊக்குவிப்பது குறித்து ஐ.நா. தலைமையகத்தில் தொடங்கிய இரண்டு நாள் கூட்டத்தில் உரையாற்றிய ஐ.நா. பொது அவைத் தலைவர் Sam Kutesa அவர்கள், ஐ.நா. நிறுவனம் புதிய வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கிவரும் இவ்வேளையில், 2015ம் ஆண்டு நம்பிக்கையின் ஆண்டாக அமைய உலகினர் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

பாரிசிலிருந்து டுனிசியா வரை, ஜொஹானஸ்பர்கிலிருந்து பேஷ்வார் வரை, Garissa விலிருந்து Yarmouk முகாம்கள் வரை எந்த ஒரு மனிதரும் பயங்கரவாத அச்சுறுத்தலினின்று விலக்குப் பெறவில்லை என்றும் Kutesa அவர்கள் கூறினார்.

ஈராக், ஆப்கானிஸ்தான், மாலி போன்ற நாடுகளில், சீரமைக்க முடியாத அளவுக்குக் கலைகள் அழிக்கப்பட்டுள்ளன என்றும், இத்தாக்குதல்களை நியாயப்படுத்தவே முடியாது என்றும் கூறினார் Kutesa.

உரையாடலையும், புரிந்துகொள்தலையும் ஊக்கப்படுத்தி, சுதந்திரக் கொள்கைகளை உறுதிப்படுத்த வேண்டும், சகிப்புத்தன்மையை வளர்ப்பதில் பெண்கள், இளையோர் மற்றும் ஊடகங்களின் பங்கு வலியுறுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார் Kutesa.

ஆதாரம்  : UN/வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.