2015-04-22 16:19:00

கடுகு சிறுத்தாலும்.... : நேர்மையை விதைப்போம்


ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி தனக்கு வயதாகி விட்டதால், நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். எல்லோரையும் தன் அறைக்கு அழைத்து, ‘என் கையில் ஏராளமான விதைகள் இருக்கின்றன, இதை ஆளுக்கு ஒன்று கொடுப்பேன். இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு, உரம் இட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக வளர்த்து அடுத்த ஆண்டு என்னிடம் காட்ட வேண்டும். யாருடைய செடி நன்றாக வளர்ந்து இருக்கிறதோ அவரே என் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும்’ என்றார். அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் இராமுவுக்கும் ஒரு விதை கொடுக்கப்பட்டது. ஒரு வாரம் கடந்தது. நிறுவனத்தில் இருக்கும் அனைவரும் தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்து விட்டது என்று பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். ஆனால் இராமுவின் தொட்டியில் செடி இன்னும் வளரவே ஆரம்பிக்கவில்லை. ஆறு மாதங்கள் ஆனபின்னரும் அவர் தொட்டியில் செடி வளரவே இல்லை. நான் விதையை வீணாக்கிவிட்டேனே என்று புலம்பினார். ஆனால் தினந்தோறும் செடிக்குத் தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தவில்லை. ஓர் ஆண்டு முடிந்தவுடன் அனைவரும் தொட்டிகளை முதலாளியிடம் காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள். இராமுவும் காலித் தொட்டியை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றார். எல்லோர் தொட்டியிலும் விதவிதமான செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் உயரத்தில் இருந்தன. இராமுவின் தொட்டியைப் பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

எல்லோருடைய செடியையும் பார்வையிட்ட முதலாளி, கடைசி வரிசையில் நின்றிருந்த இராமுவை அருகே வருமாறு அழைத்தார்.

தன்னை வேலையை விட்டு நீக்கத்தான் கூப்பிடுகிறார் என்று பயந்து கொண்டே சென்ற இராமுவிடம் முதலாளி, உன் செடி எங்கே என்று கேட்டார். ஓராண்டாக அந்த விதையை நட்டு உரமிட்டு தண்ணீர் விட்டதை விலாவாரியாக விளக்கினார் இராமு.

பிறகு இராமுவின் தோளில் கையைப் போட்டுகொண்ட முதலாளி, நமது நிறுவனத்தின் நிர்வாகத்தை ஏற்று நடத்தப் போகிறவர் இவர்தான் என்றார். இராமுவுக்கு ஒரே அதிர்ச்சி தன் தொட்டியில் செடி வளரவே இல்லை, பிறகு ஏன் நமக்கு இந்தப் பொறுப்பை கொடுக்கிறார் என்று குழம்பிப்போனார்.

சென்ற வருடம் நான் உங்களுக்கு ஆளுக்கு ஒரு விதை கொடுத்து வளர்க்கச் சொன்னேன் அல்லவா, அது அனைத்தும் அவிக்கப்பட்ட விதைகள். அந்த விதைகள் அவிக்கப்பட்டதால் அது முளைக்க இயலாது. நீங்கள் அனைவரும் நான் கொடுத்த விதை முளைக்காததால் அதற்குப் பதில் வேறு ஒரு விதையை நட்டு வளர்த்துக் கொண்டு வந்தீர்கள். இராமு மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டார், ஆகவே அவரே என் நிறுவனத்தை நிர்வாகிக்க தகுதியானவர் என்றார்.

நாம் பயணிக்கும் பாதை நேர்மையாக இருந்தால் வெற்றிகள் நம்மைத் தேடி வரும்...! 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.