2015-04-22 16:38:00

ஏழை இளையோருக்கு ஒன்றிணைந்து உதவ வத்திக்கான், யூனிசெப் உறுதி


ஏப்.22,2015. உலகில் மிகவும் வறிய நிலையிலுள்ள இளையோர் மத்தியில் கலாச்சார சந்திப்பை ஊக்குவிப்பதற்கு ஒன்றிணைந்து செயல்படும் ஒப்பந்தம் ஒன்றில் வத்திக்கானும், யூனிசெப் நிறுவனமும் கையெழுத்திட்டுள்ளன.

ஐ.நா.வின் யூனிசெப் குழந்தை நல நிதி நிறுவனத்தின் இயக்குனர் Anthony Lake அவர்கள் வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இச்செவ்வாயன்று சந்தித்து அர்ஜென்டீனாவின் Scholas Occurrentes என்ற அமைப்புடன் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புவனோஸ் ஐரெஸ் பேராயராகப் பணியாற்றிய காலத்தில், Scholas Occurrentes அமைப்பை உருவாக்கினார். இவ்வமைப்பு, தொழில்நுட்பம், கலைகள் மற்றும் விளையாட்டுகள் வழியாக சிறார் மத்தியில் கலாச்சார சந்திப்பையும், சமூக ஒருங்கிணைப்பையும் ஊக்குவிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

மேலும், Scholas Occurrentes அமைப்புக்கும், தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்புக்கும் இடையே மற்றோர் ஒப்பந்தமும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

வளர்இளம் பருவத்தினர் உலகிலும், தங்களின் சமூகங்களோடும் முழுமையாகப் பங்கேற்பதற்கு இவ்வொப்பந்தம் உதவும் எனச் சொல்லப்பட்டுள்ளது.

உலக மக்கள் தொகையில் ஏறக்குறைய 20 விழுக்காட்டினர் 10 வயதுக்கும் 19 வயதுக்கும் உட்பட்டவர்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் வளரும் நாடுகளில் வாழ்கின்றனர்.

ஆதாரம்  : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.