2015-04-21 15:09:00

திருத்தந்தை - நம் திருஅவை மறைசாட்சிகளின் திருஅவை


ஏப்.21,2015. இக்காலத்தில் பல கிறிஸ்தவர்கள் தங்களின் விசுவாசத்துக்காக துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டு வருவதை இச்செவ்வாய் திருப்பலியில் நினைவுகூர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவையின் முதல் மறைசாட்சியான தூய ஸ்தேவான் அவர்கள் மறைசாட்சியானது பற்றிக் கூறும் இச்செவ்வாய் காலை திருப்பலியின் முதல் வாசகத்தை மையமாக வைத்து மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.

லிபியக் கடற்கரைகளில் நம் கிறிஸ்தவ சகோதரர்களின் கழுத்துகள் வெட்டப்பட்டன என்று சொல்லி, ஓர் இளைஞர் கிறிஸ்தவர் என்பதால் சக தோழர்களால் உயிரோடு எரிக்கப்பட்டார் என்றுரைத்த திருத்தந்தை, குடியேற்றதாரர்கள் படகிலிருந்து திறந்த கடலில் வீசப்பட்டதற்கும் அவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதே காரணம் என்று தெரிவித்தார்.

மறைசாட்சிகளுக்கு வேறு உணவு அவசியமில்லை, அவர்களின் ஒரே உணவு இயேசுவே, தன்னைக் கொலை செய்தவர்களோடு இணக்கத்திற்கோ பேச்சுவார்த்தைக்கோ முயற்சிப்பது தூய ஸ்தேவான் அவர்களுக்கு அவசியமில்லாமல் இருந்தது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தூய ஸ்தேவான் அவர்களின் சாட்சியம் எப்படி இருந்தது என்றால், அவர்மீது குற்றம் சுமத்தியவர்கள் காதுகளை மூடிக்கொண்டு ஒன்றுசேர்ந்து அவரைக் கொலை செய்ய விரைந்தனர் என்றும், இயேசுவைப் போல, தூய ஸ்தேவானும் தவறான சாட்சியங்களையும் மக்களின் கோபங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்றும் கூறினார் திருத்தந்தை.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில் இவ்வாறு எடுத்துரைத்த திருத்தந்தை, இயேசுவைப் போல தூய ஸ்தேவானும் கிறிஸ்தவ பெருந்தன்மையான மன்னிப்பிலும், தனது எதிரிகளுக்காகவும் செபித்துக்கொண்டும் இறந்தார் என்றும், இன்றைய உலகில் எத்தனை ஸ்தேவான்கள் உள்ளனர் என்றும் கூறினார். 

இறைவார்த்தை சிலரால் எப்போதும் புறக்கணிக்கப்படுகின்றது, ஒருவர் கடினமான இதயத்தைக் கொண்டிருக்கும்போது அவருக்கு இறைவார்த்தை தொந்தரவாக இருக்கிறது, ஏனெனில் இறைவார்த்தை ஒருவரை முன்னோக்கிச் செல்வதற்குச் சவால் விடுக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

ஆதாரம்  : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.