2015-04-21 14:55:00

கடுகு சிறுத்தாலும் – கற்பனைக்குக் கடிவாளம் தேவை


மனநலக் காப்பகத்தில் இருந்த நோயாளிகளைக் காண, மருத்துவர் சுற்றி வந்தார். ஓர் அறையில், நோயாளி ஒருவர், தலையணையைத் தனக்கு முன் வைத்துக்கொண்டு அதை இரம்பத்தால் அறுப்பதைப் போல் சப்தமிட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் மருத்துவர், "என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்க, அவர், "பார்த்தால் தெரியவில்லையா? இந்த மரக்கட்டையை இரண்டு துண்டுகளாக வெட்டிக் கொண்டிருக்கிறேன்" என்று பதில் சொன்னார்.

அந்த அறையின் விட்டத்திலிருந்து மற்றொரு நோயாளி தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்தார். தலையணையை வெட்டிக் கொண்டிருந்தவரிடம், "சரி, அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார்?" என்று மருத்துவர் கேட்டதும், "அவர் என் நண்பர். ஆனால் பாவம், அவருக்கு மனநிலை சரியில்லை. தான் ஒரு மின்சார விளக்கு என்று எண்ணிக் கொண்டு, அவர் இப்படி தலைகீழாகத் தொங்குகிறார்" என்று பதில் சொன்னார், முதல் நோயாளி.

தொங்கிக்கொண்டிருந்தவர் முகமெல்லாம் சிவந்திருப்பத்தைக் கண்ட மருத்துவர், "அவர் உங்கள் நண்பர்தானே. அவரிடம் உண்மையைச் சொல்லி, அவரைக் கீழே வரச் சொல்லலாமே!" என்று மருத்துவர் சொன்னதும், முதல் நோயாளி, "பிறகு, நான் எப்படி இருளில் கட்டையை வெட்டமுடியும்?" என்று கேட்டார்.

கற்பனை, கட்டுக்கடங்காமல் போகும்போது, கவனம் தேவை. கடிவாளமும் தேவை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.