2015-04-20 12:55:00

வாரம் ஓர் அலசல் – அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்!


ஏப்.20,2015. கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்.17) மாலை வேலை முடிந்து மாநகரப் பேருந்தில் இல்லம் திரும்பிக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு மனிதர் தெருவில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு பெரிய குப்பைப் பெட்டியின் மூடியைத் தூக்கி அதை எட்டிப் பார்த்தார். பின்னர் அதை மூடிவிட்டு வேகமாக முன்னோக்கி ஓடினார். முப்பத்தைந்து வயதுக்குள்தான் அவர் இருப்பார். தலைமுடி சடை பிடித்து இருந்தது. எங்கே ஓடுகிறார் எனப் பேருந்திலிருந்து பார்த்தேன். பேருந்தும் நிறுத்தத்தைவிட்டு நகர்ந்தது. சற்றுத் தூரத்தில் இருந்த மற்றொரு பெரிய குப்பைப் பெட்டியின் மூடியை முன்பு போலவே தூக்கிப் பார்த்தார். உடனே ஏறி அதில் உட்கார்ந்துகொண்டார். அதில் குப்பைகள் அகற்றப்பட்டிருந்ததால் அவர் உள்ளே இருப்பது, குப்பைச் சாக்குகளைப் போடுபவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அவர் அப்பெட்டிக்குள் என்ன செய்கிறார் என்ற ஆவலில், பேருந்தில் பயணம் செய்த மற்றொருவரும் எட்டிப் பார்த்தார். அதற்குள் பேருந்து அந்த இடத்தைக் கடந்து வந்துவிட்டது. அந்தக் காட்சி எனது மனதைவிட்டு அகலவில்லை. குப்பையைக் கொட்டியவர்கள் அவர்மேல்தான் கொட்டியிருப்பார்கள். ஒரு வளர்ந்த நாட்டிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க நகரத்தில், தன்னிலை மறந்து தானாகப் பேசிக்கொண்டு திரியும் இளம்வயது மனிதர்களைப் பார்க்கும்போது, இளம்வயது மனிதர்கள் தெருவில் கைநீட்டி காசு கேட்பதைக் காணும்போது இந்த நிலைக்கு இவர்கள் ஆளாகக் காரணம் என்ன, இதற்கு யார் பொறுப்பு... இப்படி கேள்விகள் எழுந்து கொண்டிருக்கின்றன.

இஞ்ஞாயிறன்று ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக நாம் பார்த்த காட்சி நம் நெஞ்சை கசக்கிப் பிழிந்தது. 700க்கும் மேற்பட்ட குடியேற்றதாரர்களை ஏற்றி வந்த இருபது மீட்டர் நீளமான படகு ஒன்று, இத்தாலியின் Lampedusa தீவுக்குத் தெற்கே, லிபியக் கடற்பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவில் நீரில் கவிழ்ந்தது. இதில் குறைந்தது 650 பேராவது நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. இத்தாலிய கப்பல்களும், மால்ட்டா கடற்படையும், சரக்குக் கப்பல்களும் என, இருபது கப்பல்களும், மூன்று ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. மத்தியதரைக் கடல் வழியாக ஐரோப்பாவுக்குள் நுழைய முயற்சிக்கும் குடியேற்றதாரர்கள், பெருமெண்ணிக்கையில் உயிரிழந்த நிகழ்வு இது என்று, ஐ.நா.வின் அகதிகளுக்கான நிறுவனமாகிய UNHCR உறுதி செய்துள்ளது. இதுவரை 24 சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வு குறித்து மிகவும் வேதனையடைந்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரைக்குப் பின்னர்... இதில் காணாமல் போயுள்ளவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார். லிபியக் கடற்கரைக்கு ஏறக்குறைய அறுபது மைல் தூரத்தில் நடந்த இந்தப் படகு விபத்தில் நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர் என அஞ்சப்படுகிறது. இத்தகைய துன்ப நிகழ்வுகள் இனிமேலும் நிகழாவண்ணம் தடைசெய்வதற்கு அனைத்துலக சமுதாயம் உடனடியாக, உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதற்குப் பின்னர் சிறிது நேரம் மௌனமாக காத்த திருத்தந்தை, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் தனது உரையைக் கேட்டுக்கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான திருப்யணிகளிடம்.. "இந்தக் குடியேற்றதாரர்களும் நம்மைப் போன்ற ஆண்களும் பெண்களுமே. இவர்கள் போர்களுக்குப் பலியானவர்கள், நசுக்கப்பட்டு, காயப்பட்டு, பயன்படுத்தப்பட்டு பசித்திருப்பவர்கள். நல்லதொரு வாழ்வைத் தேடியவர்கள். மகிழ்வைத் தேடியவர்கள். இந்த நம் சகோதர சகோதரிகளுக்காக நாம் அனைவரும் முதலில் அமைதியாகவும், பின்னர் சேர்ந்தும் செபிப்போம்” என்று கேட்டுக்கொண்டார். பின்னர், எல்லாரோடும் சேர்ந்து அருள்நிறைந்த மரியே என்ற செபத்தையும் செபித்தார் திருத்தந்தை. இஞ்ஞாயிறன்று இறந்தவர்கள் தவிர, 2015ம் ஆண்டில் மட்டும், மத்தியதரைக் கடல் வழியாக ஐரோப்பாவுக்குள் நுழைய முயற்சித்த குடியேற்றதாரரில் குறைந்தது 1,500 பேர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கடந்த வாரத்தில் மட்டும் குடியேற்றதாரர் படகுகளில் 13,500 பேர் இத்தாலிய கடற்பகுதியில் பயணம் செய்துள்ளனர். 2014ம் ஆண்டில் மட்டும் 2,18,000 குடியேற்றதாரர்கள் மத்திய தரைக் கடலைக் கடந்துள்ளனர். இவர்களில் ஆயிரக்கணக்கானோர் வழியிலேயே இறந்துள்ளனர். இதுவரை வட ஆப்ரிக்காவிலிருந்து 31,500 குடியேற்றதாரர்கள் ஐரோப்பாவுக்கு வந்துள்ளனர் என்று UNHCR நிறுவனம் கூறியுள்ளது. மனித வர்த்தகர்கள் லிபியாவில் இடம்பெறும் அரசியல் நெருக்கடியை சாதகமாகப் பயன்படுத்தி, வன்முறை மற்றும் வறுமையினால் ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கிலிருந்து வெளியேறும் குடியேற்றதாரரை லிபியாவிலிருந்து படகுகளில் அனுப்புகின்றனர், இது 21ம் நூற்றாண்டின் புதிய அடிமை வர்த்தகம் என்று இத்தாலியப் பிரதமர் ரென்சி தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். இவ்வாறு ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு அதில் பிழைத்து கரையேறும் மக்கள் சுமந்துவந்த  கனவு வாழ்வும் கிட்டுவதில்லை. வேலை இல்லை, குடியிருக்க இடமில்லை. குடியேற்றதாரர்கள் குடியேறிய நாடுகளில் வன்முறையை எதிர்நோக்குவதையும் நாம் கேட்டு வருகிறோம். தென்னாப்ரிக்காவில் கடந்த இரு வாரங்களில் குடியேற்றதாரருக்கு எதிராக இடம்பெற்ற வன்முறையில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஜிம்பாபுவே, மலாவி, மொசாம்பிக் போன்ற அண்டை நாடுகளிலிருந்து தென்னாப்ரிக்காவில் குடியேறிய மக்களின் கடைகள் ஆயுதம் ஏந்திய குழுக்களால் தாக்கப்பட்டுள்ளன. அம்மக்களும் தங்களின் சொந்த நாடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர் என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன. மேலும், ஐஎஸ் இஸ்லாம் தீவிரவாதிகள் 22 எகிப்தியக் கிறிஸ்தவர்களை, லிபியாவில் தலைவெட்டிக் கொன்ற அதிர்ச்சி அகலும்முன்னர், அதே தீவிரவாதிகள் 29 எத்தியோப்பிய கிறிஸ்தவர்களை லிபியாவில் கொலை செய்துள்ளனர். இக்கிறிஸ்தவர்களும் குடியேற்றதாரர்களே.

தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள செம்மரக் கொலைகள் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். நீண்ட ஆயுளைக்கொண்ட செம்மரத்தின் தோலை உரித்தால், ரத்தச் சிவப்பில் அது செம்மரம் என எளிதாகத் தெரியும். ஆந்திர வனத் துறையால் கடத்திச் செல்லப்பட்ட இருபது தமிழகத் தொழிலாளர்களும் ஒரு பகல் முழுக்க சித்ரவதை செய்யப்பட்டு, செம்மரங்களை உரிப்பதுபோல தோல் உரிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல் பாகங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. சிலரின் பிறப்புறுப்புகள் வெட்டப்பட்டுள்ளன. சுதந்திர இந்தியாவில் நிகழ்ந்த மோசமான அரச வன்முறைகளில், இந்தக் கூட்டுக்கொலை மிக முக்கியமானது. நிச்சயம் இந்தக் கொலைகளுக்கு ஆந்திர அரசு பதில் சொல்லியே தீர வேண்டும் என்று ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர். தமிழக மலைக்கிராம மக்களை, கல் உடைக்க, புளி அடிக்க, கட்டட வேலைக்கு, காட்டு வேலைக்கு... என ஏஜென்ட்கள் அழைத்துச் சென்று, கடைசியில் செம்மரங்களை வெட்டச் சொல்கின்றனர். இப்போது கொல்லப்பட்டிருக்கும் இருபது பேரும்கூட, இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் தான் என்றும் கூறப்படுகின்றது.

நல்லதோர் வாழ்வைத் தேடி வேறிடம் செல்லும் பலர், அங்கேயே படுகொலை செய்யப்படுவது, ஆபத்தான பயணங்களில் விபத்துக்களில் இறப்பது, குற்றச் செயல்களில் கைதுசெய்யப்பட்டு தூக்கில் போடப்படுவது, சக ஊழியர்களால் பொறாமையால் கொலை செய்யப்படுவது, ஒரு வேலைக்கென அழைத்துச் செல்லப்பட்டு வேறு கடினமான வேலைகளில் ஈடுபடுத்தப்படுவது, தப்பிச் சென்று விடுவார்கள் என்ற அச்சத்தில் கடவுச் சீட்டுகளை வாங்கி வைத்துக்கொள்வது... இப்படி பல நெருக்கடிகளை இவர்கள் எதிர்கொள்கின்றனர். அதனால் சிலர் மனநிலை பாதிக்கப்படுகின்றனர், பிச்சையெடுக்கவும் இவர்கள் வெட்கப்படுவதில்லை. இளவயது மனிதர்கள் மனநிலை பாதிக்கப்பட்டு தெருவில் திரியும் நிலையைப் பார்க்கும்போது இவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தான் என்ற இரக்க, கருணை உணர்வு நம்மில் சுரக்க வேண்டும். நம் சொந்த வாழ்வால், நமது புறக்கணிப்பால், நம் சொல் செயலால், இந்நிலைக்கு யாரையும் ஆளாக்காமல் நம் வாழ்வை நாம் நெறிப்படுத்த வேண்டும். அன்பு நேயர்களே, இத்தகைய மனிதரின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரிக்காமல் இருக்க நாம் என்ன செய்யலாம், இதனை உங்களின் சிந்தனைக்கே விட்டு விடுகின்றோம்.

இந்தியாவில், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்த முடியாது, தொழுநோயைக் காரணம் காட்டி மணவிலக்கு கோர முடியும் போன்ற காலனியச் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆதரவு வழங்கியுள்ளது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்தாலும், சட்டத்தாலும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ஏராளமாக உள்ள நிலையில், புது டில்லியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற 'தொழுநோயாளிகள் வாழ்வுரிமை' குறித்த மாநாட்டில் இந்த ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

அன்பர்களே, எந்த ஒரு மனிதரும், அவர்மீது துர்நாற்றம் வீசினாலும், நறுமணம் வீசினாலும், அழகாய் இருந்தாலும், அழுக்காய் இருந்தாலும் “இவரும் என்னைப் போன்ற மனிதரே” என்ற உணர்வு இருந்தால், நாம் அவரை மனிதராக ஏற்று மதிப்புடன் நடத்துவோம், அணுகுவோம். 2ம் உலகப் போர்க் காலத்தில் ஏறக்குறைய ஆறு இலட்சம் யூதர்கள் உட்பட இலட்சக்கணக்கான மக்கள் கொலை செய்யப்படக் காரணமான ஹிட்லருக்கு சோதிடத்தில் நம்பிக்கை அதிகமாம். ஒருநாள் சோதிடரிடம், எனது எதிர்காலம் எப்படியிருக்கும்? எனது மரணம் எப்படி நிகழும்? என்று கேட்டாராம். அதற்குச் சோதிடர், யூதர்களின் ஒரு விழாவன்று நீங்கள் மரணம் அடைவீர்கள் என்று சொன்னாராம். ஹிட்லரின் இறப்பு நாள் யூதர்களுக்குத் திருநாள்தான். அன்பர்களே, இக்காலத்தில் ஹிட்லர் போன்ற கொள்கையுடைய சில குற்றக் கும்பல்களால் அப்பாவிகள் சொல்லமுடியாத சித்ரவதை மரணங்களையும், துன்பங்களையும் எதிர்கொண்டு வருகின்றனர். இந்தக் கல்மனக் குழுக்கள், தாங்கள் வதைக்கும் மக்களை, மனிதராக உணரவும், மனம் மாறவும் செபிப்போம். பல நிலைகளில் உடலிலும், மனத்திலும் துன்புறுவோரை, அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள் என்று நாமும் நினைத்து நம்மில் இரக்கப் பண்பை வளர்ப்போம். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறன்று நம்மைக் கேட்டிருப்பது போல, நம் ஒவ்வொருவரின் வார்த்தையும் வாழ்வும் சாட்சியம் பகரட்டும். நம் சொல்லும் செயலும் தண்டவாளங்கள் போல அமையட்டும்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.