2015-04-20 16:24:00

புத்த பூர்ணிமா திருநாள் - திருப்பீடம் வெளியிட்டுள்ள செய்தி


ஏப்.20,2015. மே மாதம் முதல் வாரத்தில் இடம்பெற உள்ள புத்த பூர்ணிமா என்றழைக்கப்படும் சேவாக் திருநாளை முன்னிட்டு உலகின் புத்த மதத்தினர் அனைவருக்கும் தன் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளது திருப்பீடம்.

மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகளுக்கான திருப்பீட அவை, புத்த மதத்தினர் அனைவருக்காகவும் வெளியிட்டுள்ள இச்செய்தி, கௌத‌ம‌ புத்த‌ரின் பிற‌ப்பு, ஞான‌ம‌டைத‌ல் ம‌ற்றும் இற‌ப்பை நினைவு கூரும் இந்நாளில், துன்புறுவோர் ம‌ற்றும் ஏழைக‌ளின் துய‌ர் துடைப்பதற்கான நம் அர்ப்பணத்தை மீண்டும் புதுப்பிப்போம் என விண்ணப்பிக்கிறது.

இன்றைய‌ உல‌கில் அடிமைத்த‌ன‌ம் ஒழிக்க‌ப்ப‌ட்டுள்ள‌போதிலும், இன்றும் ப‌ல‌ ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளின் உரிமைக‌ள் ம‌றுக்க‌ப்ப‌ட்டு, அடிமைக‌ள்போல் வாழும் நிலைக்கு த‌ள்ள‌ப்ப‌ட்டுள்ளதைக் காணும் நாம், அவ‌ர்க‌ளுக்காக‌ ஒன்றிணைந்து உழைக்க‌ முன்வ‌ர‌வேண்டும் என‌, த‌ன் வாழ்த்துச் செய்தியில் அழைப்புவிடுத்துள்ள‌து, இத்திருப்பீட‌ அவை.

அறியாமையினாலும் சுரண்டல்களாலும் மனம் ஊனமடையும்போதே, மனிதர்களை மாண்புடன் நடத்தாத நிலை ஏற்படுகிறது என்ற திருப்பீட வாழ்த்துச்செய்தி, மனித வியாபாரமும் அடிமைத்தனமும் நீதிக்கு புறம்பானவை என்பதில் உறுதியாக இருக்கும் மதங்கள் இவ்விடயத்தில் ஒன்றிணைந்து உழைக்க முன்வரவேண்டும் எனவும் அழைக்கிறது.

புத்த மதம், எப்போதும், வாழ்விற்கான மதிப்பையும், தனிமனிதச் சுதந்திரத்தையும் ஊக்கமளித்து வளர்க்கிறது என பாராட்டும் திருப்பீடத்தின் செய்தி, உலகின் தீமைகளைக் களைய, புத்த மதத்தினரும், கிறிஸ்தவர்களும் தங்கள் அர்ப்பணங்களைப் பலப்படுத்தி, ஒன்றிணைந்து உழைக்கவேண்டும் என அழைக்கிறது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.