2015-04-20 16:37:00

தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடு சென்ற பணியாளர்கள், புதிய ஆய்வு


ஏப்.20,2015. தமிழ்நாட்டில் 5 விழுக்காட்டுக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் யாராவது ஒருவர் வெளிநாடுகளில் வேலைபார்ப்பதாக அண்மை ஆய்வு முடிவு ஒன்று கூறுகிறது.

த‌மிழ்நாட்டிலிருந்து வெளிநாடுக‌ளில் குடியேறுவோர் எண்ணிக்கை குறித்த‌ விவ‌ர‌ங்க‌ளை அறியும் நோக்கில், திருவனந்தபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த இரு சமூக ஆய்வு மையங்களுடன் இணைந்து, சென்னை, லயோலா கல்லூரியின் சமூகவியல் பயிற்சி ஆய்வு மையம் நடத்திய இந்த ஆய்வின் வழியே,  தமிழகத்திலிருந்து செல்பவர்கள், அதிக அளவில், சிங்கப்பூருக்குச் செல்வதாக தெரியவந்துள்ளது.

தமிழகத்திலிருந்து செல்பவர்களுள் 21 விழுக்காட்டினர் சிங்கப்பூரில் வேலைபார்க்கின்றனர் எனவும், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஓமன், கத்தார், பஹ்ரைன் ஆகிய அரபு நாடுகளுக்கு 50 விழுக்காட்டிற்கும் அதிகமானவர்கள் சென்றுள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வின் முதற்கட்ட முடிவுகளின்படி, இப்படி வெளிநாடுகளில் வசிப்பவர்களின் மூலம் தமிழகத்திற்கு மட்டும் 2013ம் ஆண்டில், சுமார் 59,000 கோடி ரூபாய் அளவுக்கு, பணம் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்திலிருந்து வெளியேறுபவர்களில், படித்தவர்களின் விழுக்காடு அதிகம் இருப்பது, கவலையளிக்கும் விடயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலிருந்து வெளிநாடுக‌ளில் குடியேறுவோர் தொடர்பான முழுமையான ஆய்வு முடிவுகள், இவ்வாண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்படுமெனவும் கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற ஆய்வுகளைச் செய்வதன் மூலம், வெளிநாடு சென்று வேலை பார்த்து, பெரும் அளவில் அன்னியச் செலாவணியை ஈட்டிக்கொடுப்பவர்களுக்கு சில சலுகைகளை பெற்றுத்தர முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். 

ஆதாரம்: BBC/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.