2015-04-20 12:51:00

கடுகு சிறுத்தாலும் – படிக்காதவரின் புத்திசாலித்தனம்


ஒருநாள் படித்த ஒருவரும், படிக்காத ஒருவரும் அருகருகே அமர்ந்து இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு பந்தயம். பொது அறிவு யாருக்கு அதிகம்? படித்தவருக்கா? இல்லை, படிக்காதவருக்கா? என்பதே அப்பந்தயம். இதில் தோற்றவர் அடுத்தவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். “எனக்குப் படிப்பறிவில்லை. நீங்கள் படித்தவர்கள், ஆதலால் நீங்கள் ஒரு கேள்வி கேட்டு அதில் நான் தோற்றுவிட்டால் உங்களுக்கு நான் இருநூறு ரூபாய் தருகிறேன், அதேசமயம் நான் ஒரு கேள்வி கேட்டு அதில் நீங்கள் தோற்றுவிட்டால் எனக்கு நானூறு ரூபாய் தரவேண்டும், சரியா?” என்று கேட்டார் படிக்காதவர். சரி என்று சொல்லி, முதலில் நீங்களே கேள்வி கேளுங்கள் என்றார் படித்தவர். “ஒரு விலங்குக்கு ஆறுகால்கள், இரண்டு வால்கள், ஒரு கொம்பு. அது என்ன விலங்கு?” என்று கேட்டார் படிக்காதவர். நீண்ட நேரம் ஆராய்ந்தார் படித்தவர். பதில்  கிடைக்கவில்லை. எனவே தனது தோல்வியை ஒப்புக்கொண்டு, பந்தயப்படி, நானூறு ரூபாயை எடுத்து நீட்டினார். பந்தயப்படி பணத்தைப் பெற்றுக்கொண்டார் படிக்காதவர். அது சரி, அந்த விலங்கின் பெயர் என்ன? என்று கேட்டார் படித்தவர். இந்தாருங்கள் இருநூறு ரூபாய் என்று பந்தயப் பணத்தை நீட்டி, எனக்கும் அந்த விலங்கின் பெயர் தெரியாது என்று சொன்னார் அறிவுஜீவியான நம் படிக்காதவர்.

ஆதாரம் :   வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.