2015-04-18 14:58:00

பிறருக்குச் சேவை செய்வதில் உண்மையான மகிழ்வு உள்ளது


ஏப்.18,2015. இளம்பெண்களின் நலனுக்காக உழைத்துவரும் அனைத்துலக கத்தோலிக்க கழகத்தின் உறுப்பினர்கள் அறுபது பேரை இச்சனிக்கிழமையன்று வத்திக்கானிலுள்ள கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவைப் போல பிறருக்குச் சேவை செய்வதில் உண்மையான மகிழ்வு உள்ளது என்று கூறினார்.

பாதுகாப்பற்ற சூழலிலும், வறுமையிலும் வாழும் இளையோரின் எண்ணிக்கை இக்காலத்தில் அதிகரித்து வருகின்றது என்றும், இன்றைய உலகம் எதிர்கொள்ளும் குடியேற்றதாரர் விவகாரம் போன்ற புதிய சவால்கள் மத்தியில், மனிதர் மாண்புடன் வாழ்வதற்கு இக்கழகத்தினரின் சேவை முக்கியமானது என்றும் கூறினார் திருத்தந்தை.

தாங்கள் இறைவனால் அன்புகூரப்படுவதை உணர்ந்து, மகிழ்வாக வாழ அழைக்கப்பட்டுள்ளதை இளையோர் உணருவதற்கு இக்கழகத்தினரின் சான்று வாழ்வு அவசியம் என்றும் ஊக்கப்படுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ் .

பெரிய குடும்பமாகிய திருஅவையின் ஓர் அங்கம் என்ற உணர்வோடு, தொடர்ந்து நற்செய்தியின் மகிழ்வை அறிவிக்குமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இக்கழகத்தினர் மத்தியில் உடன்பிறப்பு உணர்வு வளரவேண்டுமென்ற தனது ஆவலையும் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.