2015-04-18 14:51:00

நவீன அடிமைமுறை குறித்த விழிப்புணர்வு அதிகம் தேவை


ஏப்.18,2015. திருப்பீட சமூக அறிவியல் கழகம் நடத்தும் ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகொண்ட 45 பிரதிநிதிகளை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய உலகுக்கு நவீன அடிமைமுறை குறித்து விழிப்புணர்வு அதிகம் தேவைப்படுகின்றது என்று கூறினார்.

நவீன அடிமைமுறையின் புதிய வடிவங்கள் குறித்தும், மனித வர்த்தகத்தை ஒழித்து, மனிதருக்கு, குறிப்பாக, சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்கள் மற்றும் ஓரங்கட்டப்பட்டவர்களின் நலனுக்குப் பணியாற்றுவது குறித்து சிந்தித்துவரும் இக்கழகத்தின் முயற்சிகளுக்கு நன்றியும் தெரிவித்தார் திருத்தந்தை.

மனித வர்த்தகம், கட்டாயத் தொழில், பாலியல் தொழில், உறுப்பு வணிகம் போன்ற அடிமைமுறையின் புதிய வடிவங்கள், இக்காலத்திய மனித சமுதாயத்தின் உடலில் ஏற்பட்டுள்ள காயம், இவை மிகக் கடுமையான குற்றங்கள் என்று பல தடவைகள் தான் குறிப்பிட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏறக்குறைய எல்லா நாடுகளையும் பாதிக்கின்ற இந்த நவீன அடிமைமுறைகள் குறித்த விழிப்புணர்வும், இந்த மனித வணிகர்களின் செயல்களை நிறுத்தவும், இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மறுவாழ்வு வழங்கவும், தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சட்டங்கள் தேவைப்படுகின்றன என்றும் கூறினார் திருத்தந்தை.

திருப்பீட சமூக அறிவியல் கழகத்தினர் நற்செய்தியின் ஒளியில் செயல்படவும், இயேசுவின் மலைப்பொழிவின் ஒளியில் இவ்வுலக நகரத்தைக் கட்டியெழுப்பவும் வேண்டுமென ஊக்கப்படுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.