2015-04-18 14:47:00

திருத்தந்தை, இத்தாலிய அரசுத்தலைவர் மத்தரெல்லா சந்திப்பு


ஏப்.18,2015. இத்தாலி நாடு நல்லிணக்கத்தில் முன்னேறவும், வளமை காணவும் தனது கிறிஸ்தவ மரபிலிருந்து நல்தூண்டுதலைப் பெறட்டும் என வாழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இச்சனிக்கிழமையன்று இத்தாலிய அரசுத்தலைவர் செர்ஜோ மத்தரெல்லா அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, வேலைதேடி அலையும் பல இளையோரின் வேதனைக் குரல்களுக்கு இத்தாலிய நிறுவனங்கள் செவிமடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

ஒரு பண்படுத்தப்பட்ட குடிமக்கள் சமுதாயத்தில், மதத்தின் உண்மையான உணர்வு, ஒருவரின் தனிப்பட்ட மனச்சாட்சிக்கு விட்டுவிட முடியாது, மாறாக, சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதில் அதன் குறிப்பிடத்தக்க பங்கு அங்கீகரிக்கப்பட வேண்டுமென்றும் இத்தாலிய அரசுத்தலைவரிடம் கூறினார் திருத்தந்தை.

கத்தோலிக்கத் திருஅவையும் தனது ஆன்மீகப் பணியை, அமைதி மற்றும் இணக்கமான சூழலில் ஆற்ற வேண்டியுள்ளது, இதற்கு அரசு அதிகாரிகளே ஊக்கமளிக்க முடியும் என்றும் கூறினார் திருத்தந்தை.

கடந்த பிப்ரவரி 3ம் தேதி இத்தாலிய அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட செர்ஜோ மத்தரெல்லா அவர்கள், தனது மகள் மற்றும் பிரதிநிதி குழுவுடன் இச்சனிக்கிழமையன்று முதன்முறையாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வத்திக்கானில் சந்தித்தார்.   

இச்சந்திப்புக்குப் பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும் சந்தித்தார் அரசுத்தலைவர் மத்தரெல்லா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.