2015-04-18 14:21:00

கடுகு சிறுத்தாலும் - உள்ளங்கை உணர்த்தும் உண்மைகள்


இரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) அவர்கள் எழுதிய சிறுகதை இது: அரசர் ஒருவர், தன் அவையில் பணிபுரியும் அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்து, அழைப்பிதழை அனுப்பினார். விருந்துக்கு வருபவர்கள் தங்கள் அழைப்பிதழைக் கையோடு கொண்டு வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். பணியாளர்களில் ஒருவர், சிறப்பு விருந்தினராக, அரசருக்கும், அரசிக்கும் நடுவே அமரும் வாய்ப்பு பெறுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

விருந்தில் அரசருக்கும், அரசிக்கும் நடுவே அமரும் வாய்ப்பு யாருக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் அனைவரும் அழைப்பிதழைக் கொண்டு வந்திருந்தனர். விருந்து மண்டபத்தில் நுழைந்தபோது, அவர்களுக்கு ஆச்சரியம் ஒன்று காத்திருந்தது. வாயில் காப்பவர்கள், பணியாளர்கள் கொண்டு வந்திருந்த அழைப்பிதழைப் பார்க்கவில்லை, மாறாக, அவர்கள் உள்ளங்கைகளைப் பார்த்தனர். ஒவ்வொரு நாளும் அரண்மனையைக் கூட்டி, கழுவி, சுத்தம் செய்யும் பணிப்பெண்ணின் கைகளைப் பார்த்த வீரர்கள், "அரசரின் சிறப்பு விருந்தினராக அமரும் வாய்ப்பு, உங்களுக்கே உள்ளது; அரசர் மீது நீங்கள் கொண்டுள்ள விசுவாசமும், அன்பும் உங்கள் கைகளில் தெரிகிறது" என்று சொல்லி, அவரை அழைத்துச் சென்று, அரசருக்கும், அரசிக்கும் நடுவே அமர வைத்தனர்.

உள்ளங்கை உணர்த்தும் உண்மைகளை உணர, உள்ளம் திறந்திருக்கவேண்டும்!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.