2015-04-17 16:23:00

பங்களாதேஷில் பழங்குடி இனத்தவர்க்குப் பாதுகாப்பு தேவை


ஏப்.17,2015. பங்களாதேஷில் அருள்பணியாளருக்கும், விசுவாசிகளுக்கும் நீதியும் பாதுகாப்பும் தேவை எனவும், மக்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாழ்வதற்கு அமைதியான ஒரு தீர்வை அரசு காணும் என்று தான் நம்புவதாகவும் கூறினார் அந்நாட்டு ஆயர் ஒருவர்.

Syleht மறைமாவட்டத்தில் Khasia பழங்குடி இன மக்கள் வாழும் ஒரு கிராமம், கிறிஸ்து உயிர்ப்புப் பெரு நாளில் கடுமையாய்த் தாக்கப்பட்டது குறித்து கவலை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள அம்மறைமாவட்ட ஆயர் Bejoy D'Cruze அவர்கள், அமைதியாக வாழும் இம்மக்கள், பெரும்பான்மை வங்காள மக்களால் அடிக்கடி தாக்கப்படுகின்றனர் என்று கூறினார்.

இம்மக்களைத் தேயிலைத் தோட்டங்களிலிருந்து வெளியேற்றுவதே இத்தாக்குதல்களின் நோக்கம் என்றும், இக்கிராமத்தில் வாழும் அனைவரும்  கத்தோலிக்கர் என்றும், கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழா திருப்பலியை பங்குத்தந்தை நிறைவேற்றிக்கொண்டிருந்தபோது முஸ்லிம் குழு ஒன்று ஆயுதங்களோடு சென்று அக்குருவைத் தாக்கியுள்ளது என்றும் கூறினார் ஆயர் டி குரூஸ்.

இந்தக் கும்பல் பங்குக் குருவைத் தாக்கிய பின்னர் விவிலியப் பிரதிகளையும், சிலுவைகளையும், திருப்படங்களையும், இசைக்கருவிகளையும் வீடுகளையும் அழித்துள்ளது மற்றும் ஆடுகளையும் கோழிகளையும் கொன்றுள்ளது என்றும் கூறினார் ஆயர் டி குரூஸ்.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.