2015-04-16 17:14:00

கிறிஸ்தவ தலைவர்களைச் சந்தித்த இஸ்ரேல் அரசுத் தலைவர்


ஏப்.16,2015. ஏப்ரல் 12, ஞாயிறன்று, ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் கொண்டாடிய இயேசு உயிர்ப்புப் பெருவிழாவையொட்டி, இஸ்ரேல் அரசுத் தலைவர், Reuven Rivlin அவர்கள், ஏப்ரல் 14, இச்செவ்வாயன்று, ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைத் தலைவர்களைச் சந்தித்து, வாழ்த்துக்களைக் கூறினார்.

30 ஆண்டுகளுக்கு முன், இஸ்ரேல் அரசுத் தலைவராக இருந்த Navon அவர்கள் இத்தகையச் சந்திப்பை மேற்கொண்டதை அடுத்து, இஸ்ரேல் அரசுத் தலைவர் ஒருவர் மேற்கொள்ளும் அடுத்த சந்திப்பு இதுவே என்று, Fides செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை, 3ம் தியோபிலஸ் அவர்கள், அரசுத் தலைவர் Rivlin அவர்களை வரவேற்று, ஏனைய சபைத் தலைவர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார்.

சியோன் மலை, ஒலிவ மலை, இன்னும் அனைத்துப் பகுதிகளில் உள்ள தொழுகைக் கூடங்கள், மசூதிகள், கோவில்கள் அனைத்தும் வன்முறைகள் ஏதுமின்றி பாதுக்காக்கப்படும் என்று, அரசுத் தலைவர் Rivlin அவர்கள், இச்சந்திப்பில் உறுதி அளித்தார்.

மேலும், ஆர்மேனிய இனப்படுகொலையின் நூற்றாண்டு நினைவையொட்டி, எருசலேம் புனிதக் கல்லறை பசிலிக்காவில் நடைபெறவிருக்கும் வழிபாட்டில் தான் கலந்துகொள்ளப்போவதாக இஸ்ரேல் அரசுத் தலைவர் Rivlin அவர்கள், ஏற்கனவே அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.