2015-04-16 16:29:00

ஒன்பது கர்தினால்களுடன் திருத்தந்தை மேற்கொண்ட சந்திப்புக்கள்


ஏப்.16,2015. பிறரன்புப்பணி, நீதி, அமைதி ஆகிய பணிகளையும், குடும்ப வாழ்வு, பொதுநிலையினர் ஆகிய பணிகளையும், மையப்படுத்தும் திருப்பீட அவைகள் உருவாக்கப்படும் என்பது தெளிவாகிறது என்று திருப்பீடச் செய்தித் தொடர்பாளரான இயேசு சபை அருள்பணி பெதெரிக்கோ லொம்பார்தி அவர்கள் கூறினார்.

திருத்தந்தையின் ஆலோசகர்களாகப் பணியாற்றும் ஒன்பது கர்தினால்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏப்ரல் 13 முதல் 15 முடிய மேற்கொண்ட சந்திப்புக்களில் இடம்பெற்ற கருத்துப் பரிமாற்றங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அருள்பணி லொம்பார்தி அவர்கள் இவ்வாறு  கூறினார்.

வத்திக்கானில் இயங்கும் ஊடகத்துறையின் பல்வேறு அமைப்புக்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகளும் இந்தச் சந்திப்பில் பேசப்பட்டன என்று, அருள்பணி லொம்பார்தி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

பாலியல் கொடுமைகளில் ஈடுபடும் அருள் பணியாளர்கள், ஆயர்கள் குறித்தும், அவர்களைப் பாதுகாக்க முயலும் பொறுப்பாளர்கள் குறித்தும் கடுமையான நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன என்றும், விரைவில் இவை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அருள்பணி லொம்பார்தி அவர்கள் விளக்கினார்.

ஒன்பது கர்தினால்கள் அடங்கிய ஆலோசனைக் குழு இதுவரை ஒன்பது முறை கூடிவந்துள்ளனர் என்று கூறிய அருள்பணி லொம்பார்தி அவர்கள், அடுத்தக் கூட்டங்கள், ஜூன் மாதம் 8 முதல் 10 , செப்டம்பர் 14 முதல் 16 மற்றும் டிசம்பர் 10 முதல் 12 ஆகிய நாட்களில் நடைபெறும் என்றும் அறிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.