2015-04-16 16:06:00

இறுமாப்பில், இதயங்களை மூடுவோருக்கு, கீழ்ப்படிதல் கடினம்


ஏப்.16,2015. இவ்வியாழனன்று தன் 88வது பிறந்தநாளைக் கொண்டாடிய முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்காக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் காலைத் திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்.

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களை, இறைவன் நல்ல உடல் நலத்தோடு காத்து, அவருக்கு, நிறைவான மகிழ்வைத் தரும்படியாக அனைவரும் செபிக்கவேண்டும் என்று திருத்தந்தை அழைப்பு விடுத்தார்.

மேலும், நாம் தேர்ந்தெடுக்கும் வழிகளைத் துணிவுடன் விட்டு விலகி, இறைவன் காட்டும் வழியில் நடப்பதே உண்மையானக் கீழ்ப்படிதல் என்று திருத்தந்தை தன் காலைத் திருப்பலியின் மறையுரையில் கூறினார்.

"மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட, கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்?" என்று புனித பேதுரு, தலைமைக் குருவுக்கு முன் துணிச்சலுடன் அறிக்கையிட்டதை மையப்படுத்தி, தன் மறையுரையை வழங்கிய திருத்தந்தை, உண்மையானக் கீழ்ப்படிதல், பல வேளைகளில், நாம் வகுத்தப் பாதையை விட்டு விலகி, வேறு பாதையில் பயணிக்க நம்மை அழைக்கிறது என்று கூறினார்.

கடவுளையும், அவர் வழங்கிய இறைவேளிப்பாடுகளையும் முற்றிலும் அறிந்ததாக எண்ணிக்கொண்டிருந்த மதத் தலைவர்கள், 'இறைவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும்' என்று பேதுரு சொன்னதைப் புரிந்துகொள்ளும் மனநிலையில் இல்லை என்று திருத்தந்தை தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

தனக்கே எல்லாம் தெரியும் என்ற இறுமாப்பில், இறைவனுடன் உண்மையான உரையாடலை மேற்கொள்ள மறுத்து, தங்கள் இதயங்களை மூடிவிடும் மனிதருக்கு, கீழ்ப்படிதல் மிகக் கடினமாக மாறும் என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை.

இறைவனுடன் உரையாடலை மேற்கொள்ள முடியாதவர்கள், கடவுளை, புதிய வழிகளில் எடுத்துரைப்போரையும் மௌனமாக்க முயல்கின்றனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

இறைவனை மக்களுக்கு எடுத்துரைக்கும் போதகர்கள், ஆசிரியர்கள், இறையியல் வல்லுனர்கள் அனைவரும், தங்கள் இதயங்களை மூடிவிடாமல், இறைவனுடன் தொடர்ந்த உரையாடலில் ஈடுபட அவர்கள் அனைவருக்காகவும் செபிப்போம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையின் இறுதியில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.