2015-04-15 17:55:00

மகள்களை இழந்த குடும்பத்தினரோடு நைஜீரியா மனதால் ஒன்றிப்பு


ஏப்.15,2015. நைஜீரியாவில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு, போக்கோ ஹராம் அடிப்படைவாதக் குழுவின் வன்முறைகளை முறியடிக்க, முயற்சிகள் செய்யப்போவதாக அறிவித்திருப்பது, மனதுக்கு நம்பிக்கை தருகிறது என்று நைஜீரிய ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் இக்னேசியஸ் கைகமா அவர்கள் கூறியுள்ளார்.

சென்ற ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி போக்கோ ஹராம் குழுவினரால் 200க்கும் அதிகமான இளம்பெண்கள் கடத்திச் செல்லப்பட்டதன் முதல் ஆண்டு நிறைவு நாளான இச்செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜோஸ் பேராயர் கைகமா அவர்கள், இவ்வாறு கூறினார்.

தங்கள் மகள்களை இழந்து வாடும் குடும்பத்தினரோடு நைஜீரியா நாடு முழுவதும் மனதால் ஒன்றித்துள்ளது என்று கூறிய பேராயர் கைகமா அவர்கள், புதிய அரசின் உறுதி மொழி, செயல்வடிவம் பெற்று, கடத்தப்பட்ட பெண்கள் வீடு திரும்பும் நாளை எதிர்பார்த்திருக்கிறோம் என்று கூறினார்.

நைஜீரியாவின் வடபகுதியில் உள்ள சிபோக் (Chibok) என்ற ஊரில் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த 200க்கும் அதிகமான மாணவியர் 2014ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி கடத்தப்பட்டு, இதுவரை எவ்வித தகவலும் இன்றி மறைத்து வைக்கப்பட்டிருப்பது உலக சமுதாயத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று Fides செய்தி கூறுகிறது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.