2015-04-15 17:36:00

பெண்கள் ஆற்றியுள்ள சாதனைகள் மிக அதிகம் - கர்தினால் டர்க்சன்


ஏப்.15,2015. வரலாற்று நூல்களைப் புரட்டும்போது, அங்கு, ஆண்களின் சாதனைகளே பெரும்பாலும் இடம்பெற்றுள்ளன என்றாலும், வரலாற்று நூல்களில் இடம்பெறாமல், பெண்கள் இவ்வுலகில் ஆற்றியுள்ள சாதனைகள் மிக அதிகம் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

"மோதல்களில் தீர்வு காண்பதற்கு பெண்களின் தலைமைத்துவம்: நம்பிக்கை கண்ணோட்டங்கள்" என்ற தலைப்பில், உரோம் நகரில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் துவக்க உரையாற்றிய திருப்பீட நீதி  அமைதி அவைத் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், வரலாற்றில் பெண்கள் ஆற்றியிருக்கும் பெரும் சேவைகளைப் புகழ்ந்து பேசினார்.

திருஅவை வரலாற்றில், சியென்னா நகர் புனித கத்தரீன் அவர்கள், நல்லெண்ண உறவுகள் வழியே அமைதியைக் கொணர முயன்ற வேளையில், புனித ஜோன் ஆப் ஆர்க், போர்த்துகல் நாட்டு புனித எலிசபெத் ஆகியோர் போர்க்களங்களில் இறங்கி, அமைதியைக் கொணர உழைத்தனர் என்பதை, கர்தினால் டர்க்சன் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

பெண்கள் இயல்பாகவே அமைதியின் தூதர்களாகவும், அமைதியைப் பயிற்றுவிப்பவர்களாகவும் இருப்பதை, தன் உரையில் வலியுறுத்தினார் கர்தினால் டர்க்சன்.

போரற்ற ஒரு நிலை மட்டுமே அமைதியை உறுதி செய்யாது என்பதை, திருஅவையும், ஐ.நா.பொது அவை போன்ற பல்வேறு உலக அமைப்புக்களும் கூறிவருவதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் டர்க்சன் அவர்கள், முன்னேற்றப் பாதையில் இவ்வுலகம் பயணிப்பதற்கு, பெண்களின் பங்களிப்பு மிகவும் தேவை என்று எடுத்துரைத்தார்.

"உயிரைச் சுமப்பது மட்டுமல்லாமல், அதை அடுத்தத் தலைமுறையினருக்கு வழங்குவதும் பெண்கள் என்பதால், அவர்களை ஒதுக்கி வாழும் சமுதாயம், வறண்டதொரு சமுதாயம்" என்று அனைத்துலகப் பெண்கள் நாளன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் நண்பகல் மூவேளை செப உரையில் கூறியதை, கர்தினால் டர்க்சன் அவர்கள், தன் உரையின் இறுதியில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.