2015-04-15 16:46:00

திருத்தந்தையின் மறைக்கல்வி–ஆணும் பெண்ணும் இணைந்து ஒரு முழுமை


ஏப்.15,2015. உரோம் நகரம், குளிர் காலத்தைத் தாண்டி, கோடைக்காலத்தை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளதால், மிதமான வெப்பத்துடன் நாட்கள் நகர, வெளிநாட்டுப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. திருத்தந்தையின் இப்புதன் மறைக்கல்வி உரைக்கு செவிமடுக்க, உரோம் தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூட்டம் நிரம்பி வழிய, குடும்பம் குறித்த தன் உரையைத் தொடர்ந்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

குடும்பம் குறித்த மறைக்கல்வி உரையில் இன்று நாம், ஆணும் பெண்ணும் எவ்வாறு ஒரு முழுமையின் இரு நிரப்புக் கூறுகளாக உள்ளனர் என்பது குறித்து நோக்குவோம் என, தன் மறைக்கல்வி உரையை திருத்தந்தை துவக்கினார். இறைவன் மனிதரை, தன் சாயலில் படைத்தார், அவர்களை ஆணும் பெண்ணுமாக படைத்தார் என விவிலியம் கூறுகிறது. மனிதரை, தன் உருவாகவும் சாயலாகவும் படைத்தார், இறைவன். அவர்களை, தனியாக அல்ல, மாறாக, ஒன்றிணைந்தவர்களாகப் படைத்தார்.

இறைத்திட்டத்தில், பாலின வேறுபாடுகள் என்பவை, ஒருவர் மற்றவரை அடிமைப்படுத்துவதற்கல்ல, மாறாக, ஒன்றிப்புக்கும் குழந்தைப் பேற்றிற்குமாகும். ஒருவரை ஒருவர் ஏற்று நடத்துவது, மனித குலத்திற்கு இணக்க வாழ்வையும், மேலும் சிறப்பையும் கொணர்கிறது. ஆனால், அதேவேளை, இது தொடர்ந்த ஒரு சவாலையும் முன்வைக்கிறது. அதாவது, ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் உரையாடுதல், மற்றும் ஒருவரையொருவர் மதித்து அன்புகூர்தலைக் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. பெண்களின் சார்பாக நாம் நிறைய ஆற்ற வேண்டியுள்ளது என்பது குறித்த பொறுப்புணர்வை இக்காலத்தில் உணர்ந்து வருகிறோம். அவர்களின் அதிகாரமும், தாக்கமும், சமூகத்திலும், திருஅவையிலும், அங்கீகரிக்கப்படுதல் வேண்டும். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிகழும் உடன்படிக்கையில் எழுந்துள்ள நெருக்கடிகள், எந்த அளவுக்கு, இறைவன் மீது நாம் கொள்ளும் விசுவாசத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பது குறித்து நம்மிடம் நாமே கேள்வி எழுப்பவேண்டும். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிகழும் உடன்படிக்கையில், தன் முத்திரையைப் பதிக்கும் இறைத்திட்டத்தை மீண்டும் கண்டுகொள்வது, இக்காலத்தின் திருஅவைக்கும், அனைத்து விசுவாசிகளுக்கும், குடுமபங்களுக்கும் பெரும் சவாலாக உள்ளது.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.