2015-04-15 17:54:00

ஜேம்ஸ் பாண்ட் நடிகர், ஐ.நா.வின் நல்லெண்ணத் தூதர்


ஏப்.15,2015.  ஒரு நடிகராக, 'கொல்வதற்கு அனுமதி' (License to Kill) என்ற திரைப்படத்தில் நடித்தவருக்கு, 'காப்பதற்கு அனுமதி' (License to Save) என்ற பொறுப்பை வழங்குகிறோம் என்று ஐ.நா.அவைப் பொதுச்செயலர், பான் கி மூன் அவர்கள் கூறினார்.

நிலத்தடி கண்ணி வெடிகளை அகற்றும் உலக நாள், ஏப்ரல் 14, இச்செவ்வாயன்று, தன் பத்தாண்டு நிறைவை எட்டியுள்ள வேளையில், நிலத்தடி கண்ணி வெடிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க, ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் நாயகனாகத் தோன்றும் டேனியல் கிரெய்க் (Daniel Craig) அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த உலகளாவிய முயற்சியின் நல்லெண்ணத் தூதராக அவரை நியமித்த வேளையில், மக்கள் மத்தியில் புகழ் பெற்றுள்ள நடிகர் கிரெய்க் வழியாக நிலத்தடி கண்ணி வெடிகளைப் பற்றிய விழிப்புணர்வு, மக்களைச் சென்றடைய அதிக வாய்ப்புக்கள் உள்ளன என்று பான் கி மூன் அவர்கள் கூறினார்.

கம்போடியா நாட்டின் வடபகுதியில் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படப் பதிவு நடந்துகொண்டிருந்தபோது, அப்பகுதியில், நிலத்தடிக் கண்ணி வெடிகளால் பாதிக்கப்பட்டவர்களை, தான் சந்தித்தது, தன்னை இந்த முயற்சிக்கு அர்ப்பணிக்கத் தூண்டியது என்று நடிகர் கிரெய்க் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார். 

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.